பிரசண்டா எக்ஸ் தளம்
இந்தியா

நேபாளம்| கூட்டணிக் கட்சிகள் விலகல்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி.. ஆட்சியை இழந்தார் பிரசண்டா!

நேபாளத்தில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசண்டாவின் ஆட்சி தோல்வியைத் தழுவியது.

Prakash J

அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை. இதையடுத்து, சிபிஎன்-யுஎம்எல் ஆதரவுடன், சிபிஎன் மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹல் என்கிற பிரசண்டா ஆட்சியமைத்ததுடன், மூன்றாவது முறையாக பிரதமராகவும் பதவியேற்றார். இந்த நிலையில், அண்மைக்காலமாக இக்கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததையடுத்து புஷ்ப கமல் தாஹல் தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் கடந்த ஜூலை 3ஆம் தேதி திரும்பப் பெற்றது.

நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்- யுஎம்எல் கட்சியும் தற்போது புதிய கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானித்திருப்பதால்தான் பிரசண்டா ஆட்சியை இழப்பதற்கு முக்கியக் காரணம். தவிர, புதிய அரசு அமையும் வகையில், பிரசந்தா பதவி விலக வேண்டும் என நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா வலியுறுத்தியிருந்தார். மேலும், பிரசண்டா தலைமையிலான ஆளும் கூட்டணி அரசுக்குப் பதிலாக புதிய அரசு அமைப்பதற்காக நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) தலைவா் கே.பி.சா்மா ஓலி ஆகியோா் இடையே கடந்த ஜூலை 1ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க: தடுமாற்றத்தின் உச்சம்| உக்ரைன் அதிபரை ‘புடின்’ என தவறாக அழைத்த ஜோ பைடன்.. அதிபர் தேர்தலில் மாற்றமா?

இந்த ஒப்பந்தத்தில், மீதமுள்ள ஆட்சிக் காலத்தில் பிரதமர் பதவியை இரு கட்சிகளும் சமமாகப் பிரித்துக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது. இந்த ஆண்டுகளில் பிரதமா் பதவியைப் பகிா்ந்துகொண்டு ஆட்சி நடத்துவது என நேபாளி காங்கிரஸ், சிபிஎன்-யுஎம்எல் கட்சிகள் தீா்மானித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, முதல்கட்டமாக சிபிஎன்-யுஎம்எல் தலைவா் சா்மா ஓலி பிரதமராக இருப்பாா். அடுத்தகட்டத்தில் நேபாளி காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா பிரதமா் பதவியை வகிப்பாா் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரதமா் பதவியை ராஜினாமா செய்வதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீா்மானத்தை எதிா்கொள்ள பிரசண்டா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அதன்படி, 275 உறுப்பினா்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் நேபாளி காங்கிரஸ் கட்சிக்கு 89 எம்பிக்களும், சிபிஎன்-யுஎம்எல் கட்சிக்கு 78 எம்பிக்களும் உள்ளனா்.

பெரும்பான்மைக்கு 138 இடங்களே தேவை எனும் நிலையில், இந்தக் கூட்டணிக்கு 167 எம்பிக்கள் உள்ளனா். ஆனால் பிரசண்டா தலைமையிலான சிபிஎன்-மாவோயிஸ்ட் கட்சிக்கு வெறும் 32 எம்பிக்களே உள்ளனா்.

அதன்படி, பிரசண்டா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. எதிர்பார்த்ததைப் போலவே, நேபாளி காங்கிரஸ், சிபிஎன்-யுஎம்எல் கூட்டணிக்கு 167 உறுப்பினா்கள் உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா தோல்வியடைந்தார். இதைத்தொடர்ந்து, சா்மா ஓலி தலைமையிலான புதிய கூட்டணி அரசு ஓரிரு நாள்களில் அமைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க: ”மருமகள் எங்களுடன் இல்லை; NOK விதியை மாற்ற வேண்டும்” - வீரமரணம் அடைந்த கேப்டனின் பெற்றோர் கோரிக்கை!