இந்தியா

இந்தியாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் நேபாள எஃப்.எம்.கள் ! - எல்லை மக்கள் புகார்

இந்தியாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் நேபாள எஃப்.எம்.கள் ! - எல்லை மக்கள் புகார்

jagadeesh

இந்தியாவுக்கு எதிராக நேபாள நாட்டின் எஃப்.எம்கள் பிரசாரம் செய்து வருவதாக எல்லையோரம் வசிக்கும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவும் நேபாளமும்1800 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து வருகின்றன. இந்நிலையில் 1816 இல் ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று நேபாளம் அண்மைக்காலமாகக் கோரி வருகிறது. அதே போல் சீனாவுடன் ஏற்பட்ட 1962 போருக்குப் பிறகே இந்தியா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள லிம்பியாதுரா, காலாபானி பகுதியையும் நேபாளம் உரிமை கோரி வருகிறது.

இந்தியா வசம் இருக்கும் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கிய வரைபடத்தை நேபாளம் கடந்த வாரம் வெளியிட்டது. இதற்கு நேபாளம் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்த கட்டமாக வரைபடம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போது அந்த வரைபடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இப்போது நேபாள நாட்டின் எஃப்.எம். நிலையங்கள் தாங்கள் ஒளிபரப்பும் பாடல்களுக்கு இடையே இந்தியா குறித்து அவதூறாகப் பேசி வருவதாக இந்திய - நேபாள எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் தன்டூ கிராமத்தைச் சேர்ந்த ஷாலு தலால் என்பவர் கூறுகையில் "இந்திய - நேபாள எல்லையோரம் வசிக்கும் மக்கள் இருநாட்டுப் பாடல்களையும் விரும்பி கேட்பார்கள். ஆனால் இப்போது நேபாள எஃப்.எம்.கள் பாடல்களின் இடையே அந்நாட்டு மாவோயிஸ்ட் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதை ஒளிபரப்பி வருகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் "இந்தியாவுக்கு எதிரான பேச்சுகள் குறித்து இதுவரை எங்களுக்கு அதிகாரப்பூர்வமான தகவல்களைக் கிடைக்கவில்லை. இது குறித்துக் கண்காணித்து வருகிறோம், விசாரணைக்குப் பின்பு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.