இந்தியப் பகுதிகளை இணைத்து நேபாளம் வெளியிட்ட புதிய வரைப்படத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இந்தியாவும் நேபாளமும்1800 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து வருகின்றன. இந்நிலையில் 1816 இல் ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று நேபாளம் அண்மைக்காலமாகக் கோரி வருகிறது. அதே போல் சீனாவுடன் ஏற்பட்ட 1962 போருக்குப் பிறகே இந்தியா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள லிம்பியாதுரா, காலாபானி பகுதியையும் நேபாளம் உரிமை கோரி வருகிறது.
இந்தியா வசம் இருக்கும் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கிய வரைபடத்தை நேபாளம் கடந்த வாரம் வெளியிட்டது. இதற்கு நேபாளம் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்த கட்டமாக வரை படம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போது அந்த வரைப்படத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.
நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா " வரைபடம் மாற்றம் பற்றி இந்தியா தனது நிலையை அதிகாரப்பூர்வமாக நேபாளத்துக்கு தெரிவிக்கும். நேபாளத்தின் நடவடிக்கை வரலாற்று ரீதியான, ஆதாரத்தின் அடிப்படையில் இல்லை. எல்லைப் பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு நேபாளத்தின் நடவடிக்கை ஊறுவிளைவிக்கும். இந்த வரைபடம் செயற்கையானது" என கூறியுள்ளார்.