நீத்து ஜோஜோ கோப்பு படம்
இந்தியா

கேரளா| “இங்க நிலைமை மோசமா இருக்கு.. உடனே வாங்க” நிலச்சரிவு குறித்து முதலில் தகவல் அளித்த பெண் மரணம்!

சண்முகப் பிரியா . செ

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மலையைச் சேர்ந்தவர் நீத்து ஜோஜோ. இவர் வயநாட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜூலை 30 அன்று இரவு அந்தப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அவர் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அவரது வீடு மட்டுமல்லாது அப்பகுதியில் இருந்த மற்ற 6 வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. ஆகவே அனைவரும் ஒப்பீட்டளவில் சிறிது பாதுகாப்பாக இருக்கும் நீதுவின் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். தங்கள் தப்ப வேறு வழி இல்லை என அறிந்த நீத்து தான் பணிபுரியும் வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு (விம்ஸ்) போன் செய்து தங்களுக்கு உதவி வேண்டும் எனக் கேட்டு ஆபாயக் குரல் எழுப்பியுள்ளார்.

கேரளா நிலச்சரிவு

அந்த அழைப்பில் அவர் ,"சூரல்மாலாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நான் இங்குள்ள பள்ளிக்குப் பின்னால் வசிக்கிறேன். நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் உள்ளிட்ட குப்பைகளால் சூழப்பட்ட தண்ணீர் எங்கள் வீட்டிற்குள் புகுந்து விட்டது. என் வீடு மட்டுமல்ல இங்குள்ள 5, 6 குடும்பங்களின் வீடுகளும் நீரில் மூழ்கி விட்டன. ஆகவே அவர்கள் அனைவரும் என் வீட்டில் இருக்கிறார்கள். ஆனால் இங்கும் நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கிறது. எங்களுக்கு உதவி செய்ய யாரையாவது அனுப்ப முடியுமா?" எனக் கேட்டுள்ளார்.

அவர் அனைத்து விவரங்களையும் கேட்டுவிட்டு , உடனே உதவிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு படையினருக்குத் தகவல் தெரிவித்து ஆட்களை அனுப்புவதாகக் கூறியுள்ளார். பின்னர் அவர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்து மீட்புப் படையினர் கலத்தில் இறங்கியுள்ளனர். எனினும், சூரல்மலையில் நிலச்சரிவால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆங்காங்கே மரங்கள் சாலையில் சாய்திருந்தன. இதனால் மீட்புக் குழுவினரால் விரைவாக செல்ல முடியவில்லை. இதற்கு நடுவே மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்புக்குழுவினர் அங்கு செல்வதற்குள் நிலைமை கைமீறிச் செல்லவே நீத்து வீட்டில் இருந்த அனைவரும் அருகில் உள்ள மலை மீது சென்று தங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிகாலை 4 மணிக்கு 2-வது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்களுடைய வீட்டின் ஒருபகுதி மண்ணில் புதைந்துள்ளது. இதில் சிக்கி நீத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எனினும், ஜோஜோ, அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மலை மீது ஏறிச் சென்றுள்ளனர். நீதுவின் உடல் கடந்த 3ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. நிலச்சரிவு குறித்து முதன் முதலில் தகவல் கொடுத்த பெண் இவர்தான் எனக் கூறப்படுகிறது. இவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.