neet pt web
இந்தியா

நீட் பயிற்சி எடுத்து வந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்; ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி!

Angeshwar G

நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அதிகளவில் தங்கி படிக்கும் இடமாக ராஜஸ்தானின் கோட்டா நகரம் உள்ளது. இங்கு பல தனியார் பயிற்சி மையங்கள் நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கின்றன. வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்து பயிற்சி பெறுகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் இங்கு வந்து பயிற்சி மேற்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.

Neet

இது ஒருபுறம் இருக்க நடப்பாண்டில் மட்டும் 24 மாணவர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் தற்கொலைகள் நிகழ்ந்தாலும் நடப்பாண்டு இருமடங்கு வரை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 15 மாணவர்களும், 2019 ஆம் ஆண்டு 18 மாணவர்களும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

முன்னதாக, அதிகரித்து வரும் தற்கொலைகள் குறித்தும் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கவலை தெரிவித்திருந்தார். கடந்த மாதத்தில் அடுத்தடுத்த தினங்களில் நுழைவுத்தேர்வு பயிற்சிக்காக வந்த 2 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்கொலைகளை தடுக்கும் முயற்சியில் ஒன்றாக, விடுதிகளில் உள்ள மின்விசிறிகளில் ஸ்பிரிங் பொருத்தும் பணிகள் நடந்தன. மேலும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணிகளும் நடைபெற்றது.

இந்நிலையில் ஜார்க்கண்டைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் கோட்டாவில் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த நிலையில் விடுதி அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ரிச்சா சிங் என்ற அந்த மாணவி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர். மாணவி உயிரிழந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.