நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துவிட்டது, வெளிவந்துவிட்டது என்ற தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதும், இது சம்பந்தமான கைது நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ச்சியாக நடந்துவருவதையும் பார்த்துக் கொண்டு வருகிறோம்.
இதில் பீகார் மாநிலத்தில் நடக்கக்கூடிய விசாரணைகளும், கைது நடவடிக்கைகளும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நீட் முறைக்கேட்டில் பீகார் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள 4 மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் தெரியவந்துள்ளது. இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விபரங்கள் சந்தேகத்தை கிளப்புவதாக அமைந்துள்ளது.
இதில் ஆயுஷ்ராஜ் எனும் மாணவர் ஒட்டுமொத்தமாக 720 மதிப்பெண்களுக்கு 300 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இதில் இயற்பியல், வேதியலில் தலா 15% மதிப்பெண்களத்தான் பெற்றுள்ளார். ஆனால் உயிரியலில் கிட்டத்தட்ட 87% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
அனுராக் என்னும் மாணவர் வேதியியலில் 5% மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளார். ஆனால் இயற்பியலில் 85% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இப்படி ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் மிகவும் குறைந்த மதிப்பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் மிக அதிக மதிப்பெண்ணும் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.
குறிப்பிட்ட பாடப்பிரிவில் மாணவருக்கு ஆர்வம் இருந்திருக்கும்; அதனால் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்கலாம் என கருதலாம். ஆனால், விசாரணை அப்படியான விஷயங்களைச் சொல்லவில்லை. மாணவர் ஒருவரிடம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை பெற்றுக்கொண்டு இந்த வினாத்தாளை கசிய விடுகின்றனர் என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. முழு பணம் இல்லை, குறைவாக இருக்கிறது என்றால் அதற்கேற்றவாறு மாணவர்களிடம் வினாத்தாளின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் கொடுத்துள்ளனர். இப்படித்தான் இந்த சிஸ்டம் இயங்குவதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
அபிஷேக் குமார் எனும் மாணவர் எல்லாவற்றிலும் 95% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். மொத்தமாக 581 மதிப்பெண்களைப் பெற்றுள்ள சூழலில் அகில இந்திய அளவில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 234 ஆவது இடத்தில் உள்ளார்.
பணம் கொடுக்கக்கூடிய மாணவர்களுக்கு முதல்நாள் இரவோ அல்லது தேர்வுக்கு சில மணி நேரத்திற்கு முன்போ வினாத்தாளை கொடுத்துவிடுகின்றனர். இதன்பின் அதைப்படித்து மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். இந்த முறையைத்தான் பிகார் மாநிலத்தில் சிக்கந்தர் எனும் ஒருவரின் கீழ் இயங்கும் கும்பல் கையாள்கிறது.
வினாத்தாள் ஒன்றிற்கான தொகை என்பதும், அப்பகுதியின் சூழலுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளா விசாரணையில், இதற்கு முன் நடந்த தேர்வுகளில் இதன்மூலம் பயன்பெற்றவர்கள் யார் என்ற விசாரணையும் நடந்து வருகிறது.