இந்தியா

பெண் ராணுவ போலீஸ் பணி - முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் 600 பேர் பங்கேற்பு  

பெண் ராணுவ போலீஸ் பணி - முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் 600 பேர் பங்கேற்பு  

webteam

பெண் ராணுவ போலீஸ் பணிக்கு ஆள் சேர்ப்புக்கான முதல் உடற்தகுதி தேர்வில் 600 பேர் பங்கேற்றனர். 

கடந்த ஏப்ரல் மாதம் இந்திய ராணுவத்தில் பெண்கள் ராணுவ போலீஸ் பிரிவில் சேர்க்கப்படவுள்ளனர் என்று ராணுவம் அறிவித்தது. இதற்கான உடற்தகுதி தேர்வு தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. லக்நோவில் மூன்று நாட்கள் இந்த உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்க 595 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். 

ராணுவ போலீசிலுள்ள 100 காலிப் பணியிடங்களுக்கு இந்த உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. இதில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் காலிப் பணியிடங்களுக்கு நாடு முழுவதும் 2 லட்சம் பெண்கள் விண்ணப்பத்தினர். இவர்களிலிருந்து 4,558 பேர் உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து ராணுவ அதிகாரி அஷூதோஷ் மேத்தா, “முதன்முறையாக பெண்கள் ராணுவ போலீஸ் பதவிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். நேற்று நடைபெற்ற முதல் நாள் உடற்தகுதி தேர்வில் 595 பேர் கலந்து கொண்டனர்” எனத் தெரிவித்தார். இந்தத் தேர்வில் பங்கேற்ற பெண் ஒருவர், “இது ஒரு சிறப்பான அனுபவம். இந்திய ராணுவத்தில் பெண்களை வேலைக்கு எடுப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இந்தத் தேர்வின் போது அதிகாரிகள் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்தனர்” எனத் தெரிவித்தார். 

ராணுவ போலீஸில் பெண்களை சேர்ப்பதற்கான தேர்வு நான்கு மண்டலாக பிரிக்கப்பட்டு நடைபெறுகிறது என ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது உத்தரப்பிரதேசத்தில் முதல் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.