இந்தியா

மாநிலங்களவையில் பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி !

மாநிலங்களவையில் பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி !

webteam

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலங்களவையில் பெரும்பான்மையை நெருங்க உள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாதது பிரச்னையாக உள்ளது. குறிப்பாக ‌பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு இது பெரும் தடையாக உள்ளது. ஆனால், வரும் ஜூலை 5ஆம் தேதிக்கு பிறகு‌ பாஜகவுக்கு ஆதரவாக நிலைமை மாற வாய்ப்புள்ளது. 

மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 111 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 64 உறுப்பினர்களும், காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத அதே வேளையில் பாஜகவை எதிர்க்கும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 44. பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களின் எண்ணிக்கை 16ஆக உள்ளது. 10 எம்பி பதவியிடங்கள் காலியாக உள்ளன. 

ஜூலை 5ஆம் தேதி பீகார் , குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் 4 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கும். ஜூலை 5ஆம் தேதிக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 115ஆக உயரும். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 எம்பிக்கள், இந்திய தேசிய லோக் தள கட்சியை சேர்ந்த ஒரு எம்பி என 5 பேர் பாஜகவில் இணைந்து விட்டனர். இதன் மூலம் பாஜக ஆதரவு எம்பிக்களின் எண்ணிக்கை 120ஆக அதிகரிக்கிறது. 245 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 123 உறுப்பினர்களை பெற்றால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும். 

ஜூலை 5ஆம் தேதிக்கு பிறகு பாஜக கூட்டணியின் பலம் 120 ஆக இருக்கும் நிலையில், தமிழகத்தில் 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் அதிமுக கூட்டணி சார்பில் 3 இடங்கள் கிடைக்கும் என்ற நிலையில், அவற்றின் ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரும்பான்மைக்கு தேவையான 123 இடங்களை எட்ட முடியும். மேலும், டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு மத்திய அரசால் மசோதாக்களை சிக்கலின்றி நிறைவேற்ற வாய்ப்பு ஏற்படும்.