18 ஆவது மக்களவை தேர்தல் முடிவடைந்து, மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் மிகவும் அதிகாரம் வாய்ந்த இருக்கைகளாக சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான பலத்த போட்டி நிலவி வருகிறது.
அதில் சபாநாயகர், துணை சபாநாயகரை ஒருமனதாக தேர்வுசெய்ய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எண்ணிய நிலையில், எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சி தலைவர்களோடு அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
பாஜகவை சேர்ந்தவர்கள் சபாநாயகர் பதவியை வகிக்க விரும்புவதாக தெரிவிக்கவே, பாஜகவின் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அதற்கு ஒப்புக்கொண்டன. ஆனால் துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
மறுபுறம் பிரதான எதிர்க்கட்சிகளும், சபாநாயகர் பதவிக்கு பாஜகவை சேர்ந்தவர்களை ஒருமனதாக தேர்ந்தெடுக்க வேண்டுமெனில், துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அப்படி முன்னிறுத்தாவிட்டால் நாங்கள் எங்களின் வேட்பாளரை முன்னிறுத்தி நாயகரை தேர்வு செய்வோம் என்று வலியுறுத்தினர்.
ஆனால் துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படுவது குறித்து எந்த தகவலையும் பாஜக அரவு கொடுக்காத சூழலில், சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி வேட்பாளராக கொடிக்குன்னிஸ் சுரேஷை முன்னிறுத்தனர் எதிர்க்கட்சிகள். மறுபுறம் இவருக்கு எதிராக, nda வேட்பாளராக ஓம் பிர்லாவை முன்னிறுத்தியது பாஜக கூட்டணி.
மக்களவை தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொறுத்தவரை 293 உறுப்பினர்கள் உள்ளனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி ராஜினாமா செய்ததால் I.N.D.I.A. கூட்டணிக்கு 233 பேர் உள்ளனர். சுயேச்சைகள் மூவரின் ஆதரவு மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவு I.N.D.I.A. கூட்டணிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தேசிய ஜனநாயக வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கும் செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மக்களவையில் குரல் வழி வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில், மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லாவை முன்மொழிந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் முன்மொழிந்ததை அடுத்து பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி தலைவர்கள் வழிமொழிந்தனர். இதேபோல, கொடிக்குன்னில் சுரேஷை I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் வழிமொழிந்தனர்.
தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பில் ஓம் பிர்லா அதிக வாக்குகளை பெற்றதால் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். மக்களவை சபாநாயகராக 2 ஆவது முறையாக தேர்வான ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்து சென்ற பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும், சபாநாயகர் தேர்தலை சிறப்பாக முடித்ததற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூவும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர், “18 ஆவது மக்களவை பல்வேறு சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது. தேசத்தின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அவை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். காங்கிரஸ் உறுப்பினர் பலராம் ஜாக்கருக்கு பிறகு 2 ஆவது முறையாக சபாநாயகராகியுள்ளார் ஓம் பிர்லா.
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மக்களவையில் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு காரணமாக இருந்தவர் ஓம் பிர்லா. கடந்த முறை சபாநாயகராக ஓம் பிர்லா சிறப்பாக செயல்பட்டார். மக்களவையை எப்படி கையாள வேண்டும் என்பது ஓம் பிர்லாவுக்கு தெரிந்திருக்கிறது” என்று பேசினார்.
இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றுகையில், “அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் மக்களின் குரலாக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன” என்று தெரிவித்தார்.
கூடுதலாக, 1976 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தகக்து.