இந்தியா

முன்னாள் முதலமைச்சர் மகன் கொலை வழக்கில் மருமகள் கைது

முன்னாள் முதலமைச்சர் மகன் கொலை வழக்கில் மருமகள் கைது

webteam

‌உத்தர பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி. திவாரியின் மகன் மர்ம‌மான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அவரது மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 16ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலத்தில் வாக்குப்பதிவு செய்துவிட்டு வீடு திரும்பிய என்‌.டி.திவாரியின் மகன் ரோஹித் திவாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்திருந்தனர். 

இதனிடையே ரோஹித் திவாரி உயிரிழப்பதற்கு முன்னதாக குடி போதையில் வீட்டுக்குச் சென்ற சிசிடிவி காட்சி கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சொத்துகளை அபகரிக்க அவரை கொன்றிருக்கலாம் என ரோஹித்தின் தாய் உஜ்வல்லா திவாரி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், ரோஹித் திவாரியின் மனைவி அபூர்வாவை கைது செய்துள்ளனர்.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள காவல்துறை, ரோஹித் திவாரியின் மனைவியான அபூர்வாவிடம் 3 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானாதாக இல்லை என்றும், திருமணத்துக்குப் பிறகு தனது நம்பிக்கை, கனவு எல்லாம் சிதைந்துவிட்டதாகவும் அபூர்வா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் காவல்துறை அதிகாரி ராஜிவ் ரஞ்சன், ''கொலை நடந்த அன்று அவர்களுக்குள் சண்டை முற்றியுள்ளது. அப்போது ரோஹித் குடிபோதையில் இருந்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ரோஹித்தின் முகத்தை தலையணையால்  அழுத்தி அபூர்வா கொலை செய்துள்ளார். அதிகாலை 1 மணியளவில் கொலை நடந்துள்ளது. அடுத்த ஒன்றரை மணிநேரத்தில் அபூர்வா ஆதாரங்களை அழித்துள்ளார் என்று தெரிவித்தார்.

பொதுவாக ரோஹித் பகலில் நீண்ட நேரம் தூங்கும் பழக்கமுடையவர் என்பதால் ரோஹித் தூங்கிக்கொண்டிருப்பதாக நினைத்துகொண்டு ரோஹித்தின் அறைக்குள் யாருமே செல்லவில்லை. ஏப்ரல் 17 அன்று மாலை 4 மணி அளவில் ரோஹித்தின் அறைக்கு சென்ற அவரது தாயார் உஜ்வாலா, சரிந்து கிடந்த ரோஹித்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு ரோஹித் அழைத்துச்செல்லப்பட்டார்.

கடந்த 2008ம் ஆண்டு என்.டி. திவாரி தன்னுடைய தந்தை என ரோஹித் திவாரி வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் மரபணு சோதனை மூலம் ரோஹித் திவாரியின் தந்தை என்.டி. திவாரிதான் என வழக்கு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ரோஹித் திவாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.