இந்தியா

என்.டி.திவாரி மகனைக் கொன்றது ஏன்? மனைவி பரபரப்பு வாக்குமூலம்!

webteam

என்.டி.திவாரி மகன் கொல்லப்பட்ட வழக்கில் அவர் மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்தவர் என்.டி.திவாரி. இவர் மகன் ரோகித் சேகர் திவாரி (40), டெல் லியில் வசித்து வந்தார். கடந்த 12 ஆம் தேதி உத்தரகாண்ட் சென்றுவிட்டு 15 ஆம் தேதி வீட்டுக்குத் திரும்பினார். அப்போது மது போதையில் இருந்துள்ளார். இந்நிலையில் ரோகித்தின் அம்மா, உஜ்வாலாவுக்கு கடந்த 16 ஆம் தேதி, போன் அழைப்பு வந்தது. அதில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் ரோகித் மயங்கி கிடக்கிறார் என்று கூறப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் ரோகித்தை மருத்துவமனையில் சேர்த்தார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

அவர் உடல், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கையில், ரோகித் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறி இறந்திருப்பது தெரியவந்தது. அவர் மரணம் இயற்கையானது அல்ல என்று மருத்துவ அறிக்கை தெரிவித்த தால் இதை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். 

உஜ்வாலாவுக்கு போன் வந்த போது, ரோகித் மனைவி அபூர்வா, உறவினர் மற்றும் வேலைக்காரப் பெண் வீட்டில் இருந்துள் ளனர். போலீசார் ரோகித்தின் மனைவி, உறவினர் மற்றும் வேலைக்காரப் பெண் ணிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

ரோகித்தும் அவர் மனைவி அபூர்வாவும் கருத்துவேறுபாடு காரணமாக, ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். சம்பவம் நடந்த அன்று, ரோகித்தும் அபூர்வாவும் சண்டையிட்டதாக வேலைக்காரப் பெண் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து ரோகித் மனைவி அபூர்வாவிடம் போலீசார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மீது சந்தேகம் வலுத்தது. 

ரோகித் திவாரியின் அம்மா கூறும்போது, “அபூர்வாவுக்கு எங்கள் சொத்து மீது ஆசை இருந்தது. அதை பறிக்கத் திட்டமிட்ட னர்’’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சொத்துக்காகவே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் மனைவி அபூர்வாதான் இந்த கொலையை செய்தார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் கைது செய்யப் பட்டார். அவர் வாக்குமூலத்தில் சொன்னதாக, போலீசார் கூறியிருப்பதாவது: 

அபூர்வாவுக்கும் ரோகித்துக்கும் மணவாழ்க்கை சமூகமாக இல்லை. கருத்துவேறுபாடு காரணமாக ஒரே வீட்டில் தனித்தனி யாக வசித்துள்ளனர். ரோகித்துக்கு உறவுப் பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அது தொடர்ந்தால் சொத்து கிடைக் காமல் போய்விடுமோ என்று பயந்தார் அபூர்வா. கடந்த 10 ஆம் தேதி, ரோகித், அவர் தம்பி, அம்மா, உறவுப் பெண் ஆகியோர் கோட்வாருக்கு சென்றுவிட்டு 15 ஆம் தேதி திரும்பினர். ரோகித்தும் உறவுக்காரப் பெண்ணும் ஒரு காரிலும் அவர் அம் மாவும் தம்பியும் மற்றொரு காரிலும் வந்தனர். 

போதையில் இருந்த ரோகித் வந்ததும் அபூர்வாவிடம் தகராறு செய்துள்ளார். பின் சாப்பிட்டுவிட்டு இரவு 11 மணியளவில் முதல் மாடியில் உள்ள அவர் அறைக்குச் சென்றார். நள்ளிரவு 12.45 மணிக்கு அவர் அறைக்குச் சென்ற அபூர்வா, தூங்கிக் கொண்டிருந்த ரோகித்தின் வயிற்றில் ஏறி உட்கார்ந்து கழுத்தை நெரித்தார். அவர் போதையில் இருந்ததால் போராட முடியவில்லை. அப்போது ரோகித், அபூர்வாவை தாக்க முயன்றார். இதில் அவர் மூக்கு அபூர்வா மீது பலமாக மோதியது. இதனால் ரோகித் மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. 

பின்னர் தலையணையால் அமுக்கி, சிறிது நேரத்தில் ரோகித்தைக் கொன்ற அபூர்வா, போர்வையால் உடலை மூடிவிட்டு, சத்தம் போடாமல் தனது அறைக்கு வந்தார். காலை 10 மணி வரை தூங்கிக் கொண்டிருந்தார். 

ரோகித்தின் அம்மா உஜ்வாலா, வீட்டுக்கு வந்ததும்தான் வேலைக்காரப் பெண், அபூர்வாவை உசுப்பி இருக்கிறார். அப்போது, ’ரோகித்துக்கு உடல்நிலை சரியில்லை, மேலே தூங்கிக் கொண்டிருக்கிறார்’ என்று உஜ்வாலாவிடம் ஒன்றும் நடக்காதது போல தெரிவித்திருக்கிறார், அபூர்வா. பின்னர் விசாரணையில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் .

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு என்.டி. திவாரிதான் தன் தந்தை என ரோகித் திவாரி வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் மரபணு சோதனை மூலம் ரோஹித் திவாரியின், தந்தை என்.டி. திவாரிதான் என வழக்கு முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.