மஹுவா மொய்த்ரா, ரேகா ஷர்மா எக்ஸ் தளம்
இந்தியா

NCW தலைவிக்கு எதிராக சர்ச்சை கருத்து.. மஹுவா மொய்த்ரா மீது பாய்ந்த வழக்கு.. விரைவில் கைது?

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த ஜூலை 2ஆம் தேதி போலே பாபாவின் ஆன்மிகக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக தேசிய மகளிர் ஆணையத் (NCW) தலைவி ரேகா சர்மா, கடந்த ஜூலை 4ஆம் தேதி ஹத்ராஸ் சென்றார்.

அப்போது, அவருக்கு யாரோ குடை பிடித்திருப்பதைப்போல வீடியோக்கள் வெளியாகின. இதுதொடர்பாக நெட்டிசன்கள் பலரும் அவருக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டனர். "NCW தலைவரால் ஏன் குடையைப் பிடிக்க முடியவில்லை" எனக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, "அவர் தனது முதலாளியின் பைஜாமாவை தூக்கிப் பிடிப்பதில் மிகவும் பிஸியாக இருந்திருப்பார்" எனப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிக்க: வெற்றிக் கொண்டாட்டம் முடிந்தபின் இங்கிலாந்துக்குப் பயணம்.. அவசரமாய் புறப்பட்டுச் சென்ற விராட் கோலி!

ரேகா ஷர்மாவும் இந்தச் சம்பவம் குறித்து “நான் குடைக்குள் நிற்கவில்லை” என்று தெளிவுபடுத்தினார். மேலும் அவர் , "அவர் (மஹுவா) தனது வேலையில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மக்களை ட்ரோல் செய்வதில்தான் ஆர்வம் காட்டுகிறார். மேலும் ட்ரோலர்களுக்கு எனது நேரத்தை நான் கொடுப்பதில்லை" என்று தெரிவித்ததுடன், மொய்த்ராவின் கருத்து குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா ஆகியோருக்கும் கடிதம் எழுதினார்.

மேலும் அவருடைய இந்தப் பதிவுக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்திருந்ததுடன், “மஹுவா மொய்த்ரா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரியிருந்தது. அதேபோல மஹுவா மொய்த்ராவை விமர்சித்த பாஜகவும், ’அவர் எம்.பி.யை பதவி ராஜினாமா செய்ய வேண்டும்’ எனக் கோரியது.

இந்த நிலையில் மஹுவா மொய்த்ராவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடர உள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், சுவோ மோட்டோவாக இந்த வழக்கினை விசாரிக்கவுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

ஆனால் மஹுவா மொய்த்ரா இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில் ‘விரைவில் என்னைக் கைது செய்வதற்காக அடுத்த 3 நாட்களில் நான் நாடியாவில் இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்திய அணியின் வெற்றி ஊர்வலம் | குஜராத்திலிருந்து பஸ் கொண்டுவரப்பட்டது ஏன்? கேள்வி எழுப்பும் மும்பை