இந்தியா

அமைச்சர் வீட்டிற்குள் நண்டுகளை விட்டு நூதனப் போராட்டம் 

அமைச்சர் வீட்டிற்குள் நண்டுகளை விட்டு நூதனப் போராட்டம் 

webteam

மகாராஷ்டிராவில் அணை உடைந்ததற்கு நண்டுகளே காரணம் எனக் கூறிய அமைச்சர் வீட்டில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் நண்டுகளைப் பிடித்து கொண்டுபோய் விட்டனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக, ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லூன் தாலுகாவில் உள்ள, திவாரே அணை நிரம்பி வழிந்தது. கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவில் அணையின் ஒரு பகுதி திடீரென உடைந்து அணையை ஒட்டியுள்ள 7 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. 12 வீட்டுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. 23 பேர் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை, 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில நீர்வளத்துறை அமைச்சர் தனாஜி சாவந்த், அணை உடைப்புக்கு நண்டுகள் தான் காரணம் எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்,"இந்த அணை 2004 ஆம் ஆண்டுதான் கட்டப்பட்டது. கட்டப்பட்டதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அணையில் நண்டுகளால்தான் பிரச்னை. அதிக அளவில் இருந்த நண்டுகளால் அணையின் தடுப்பு பலவீனம் அடைந்துள்ளது. அதனால் உடைப்பு ஏற்பட்டது” எனத் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.  

இந்நிலையில் புனேயில் உள்ள அமைச்சர் தானாஜி சாவந்த் வீட்டில் புகுந்த தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு பெட்டி நிறைய நண்டுகளைப் பிடித்து கொண்டு போய் விட்டனர். பெண் தொண்டர்கள் சிலர் நண்டு முகமூடி அணிந்தபடி அமைச்சர் வீட்டின் வெளியே  போராட்டம் நடத்தினர்.