அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே எக்ஸ் தளம்
இந்தியா

மத்திய அமைச்சர் பதவி| அதிருப்தியில் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே

Prakash J

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா ஆட்சியில் உள்ளது. இதே ஆட்சியில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பிரிவு அணியும் உள்ளது. இக்கூட்டணியே நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டன.

இதில் ஏக்நாத் ஷிண்டே அணி 7 இடங்களையும், பாஜக 9 இடங்களையும், அஜித் பவாரின் என்.சி.பி. 1 இடத்தையும் கைப்பற்றின. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. 71 அமைச்சர்கள் நேற்று பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான துறைகள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

modi cabinet

இந்த நிலையில், புதிய அமைச்சரவையில் அஜித் பவார் அணிக்கு கேபினட் அமைச்சர் வழங்கப்படவில்லை. இதனால் அவ்வணி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வணியில் வெற்றி பெற்ற பிரபுல் படேல், ஏற்கெனவே மத்திய அமைச்சராக பதவி வகித்திருக்கும் நிலையில், இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும், மத்திய அமைச்சர் பதவிக்காக சிறிது காலம் காத்திருப்போமே தவிர, இணையமைச்சர் பதவியை ஏற்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டார்.

இதையும் படிக்க: மத்தியஅமைச்சரவை பட்டியல்|யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கீடு? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதேநேரத்தில், ஷிண்டே அணியின் பிரதாப் ராவ் ஜாதவ் தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சராக பதவியேற்றார். தற்போது அந்த அணியும் அதிருப்தி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவைவிட குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ள சிராஜ் பஸ்வான், ஹெ.டி.குமாரசாமி, ஜிதன்ராம் மாஞ்சி உள்ளிட்டோருக்கு மத்திய கேபினெட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் தலைமை கொறாடா ஸ்ரீரங் பார்னே, “நாங்கள் கேபினெட் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தோம். 7 தொகுதிகளில் வென்றுள்ள சிவசேனாவுக்கு மத்திய கேபினெட் அமைச்சர் பதவி வழங்கவில்லை. ஆனால், 5 தொகுகளில் வெற்றி பெற்ற சிராஜ் பஸ்வான், 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமி, ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற ஜிதன்ராம் மாஞ்சிக்கு கேபினெட் பதவி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை பதவியேற்று 24 மணிநேரத்துக்குள் கூட்டணியின் முக்கிய இரு கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தன் கட்சித் தலைவர்களுடன் ஷிண்டே முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: சபாநாயகர் பதவி| போட்டிபோடும் கூட்டணிக் கட்சிகள்.. தேர்வாகிறாரா ஆந்திராவை அலறவிட்ட புரந்தேஸ்வரி?