இந்தியா

‘நான் பிரபலம் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல' -சாதி கொடுமையை பகிர்ந்த நவாசுதீன்..!

JustinDurai
‘நான் பிரபலம் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவர்களது நாடி, நரம்புகளில் சாதி வெறி ஊறிப்போய் உள்ளது' எனக் கூறியுள்ளார் நவாசுதீன் சித்திக்.
 
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், என்.டி.டி.வி.க்கு அளித்த நேர்காணலில், தான் சந்தித்த சாதி பாகுபாட்டை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘’எனது பாட்டியின் குடும்பத்தை அவரது சாதி காரணமாக அந்த கிராமத்தில் உள்ள சிலர் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
 
நகர்ப்புற கலாச்சாரத்தில் சாதிகள் இரண்டாம் பட்சம் என்றாலும், கிராமப்புற இந்தியாவில் சாதிகளின் ஆதிக்கம் இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. கிராம மக்கள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம் நகரங்களில் இருப்பதைப் போல இல்லை.
 
நீங்கள் ஒரு பாலிவுட் நடிகரா இல்லையா என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. சாதி வெறி அவர்களது நாடி, நரம்புகளில் ஊறிப்போய் உள்ளது. அதை அவர்கள் பெருமையாக கருதுகிறார்கள். சாதி பாகுபாட்டின் வேர்கள் நம் சமூகத்தில் மிகவும் ஆழமானவை’’ என்றார்.
 
தொடர்ந்து ஹத்ராஸ் இளம்பெண் கொலை வழக்கு துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்ட நவாசுதீன், அதற்கெதிராக அனைத்து மக்களும் குரலெழுப்ப வேண்டும்’ என்றார்.
 
 
சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி ஹிட் அடித்த ‘சீரியஸ் மேன்’ திரைப்படத்தில் நவாசுதீன் சித்திக் நாயகனாக நடித்துள்ளார். அப்படத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தந்தை கதாபாத்திரத்தில் நவாசுதீன் சித்திக் நடித்திருப்பார்.