சர்வதேச படகுப் போட்டியில் பங்கேற்றபோது நடுக்கடலில் படுகாயமடைந்த இந்திய வீரரை மீட்க கடற்படை தீவிரம் காட்டி வருகிறது.
உலகை கடல் வழி சுற்றிவரும் 'கோல்டன் குளோப்' எனப்படும் சர்வதேச படகுப் போட்டி நடந்து வருகிறது. பிரான்சில் இருந்து ஜூலை 1 ஆம் தேதி துவங்கிய இந்தப் போட்டியில், 30 ஆயிரம் மைல் துாரத்தை தனி நபராக படகில் கடந்து வர வேண்டும். நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் பாய்மர படகுகளை கொண்டு நடத்தப்பட்ட போட்டி இது.
இதில் இந்தியாவின் சார்பில் கடற்படையைச் சேர்ந்த கமாண்டர், அபிலாஷ் டோமி (39) கலந்து கொண்டார். உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, 'துரியா' என்ற படகில் 84 நாட்களில், 10 ஆயிரத்து, 500 மைல் கடந்து போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலி யா அருகே தென் இந்தியப் பெருங்கடலில் பயணித்தபோது, கடலில் ஏற்பட்ட சீதோஷ்ணநிலை மாற்றம் மற்றும் புயல் காரணமாக அவர் சென்ற படகு சேதமடைந்தது. இதில் அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, அவரை மீட்கும் பணியில், ஆஸ்திரேலிய கடற்படை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய போர்க் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர், விமானம் ஆகியவையும் பயன்படுத்தப்படுகிறது.
கமாண்டர் அபிலாஷ் டோமி 2012-ம் ஆண்டிலும் கடல் பயணம் செய்து உலகை சுற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.