சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், நவீன் பட்நாயக் பேசினார். இதன்போது, வயது முதிர்வால் ஏற்பட்ட தளர்வில், அவரது கை நடுங்கியது. இதைப் பார்த்த முன்னாள் அரசு அதிகாரியும், பிஜூ ஜனதா தள மூத்த நிர்வாகியுமான வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக் கையை எடுத்து மைக் அருகே மறைவாக வைத்தார்.
இந்தக் காட்சியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக நிர்வாகியும், அஸ்ஸாம் மாநில முதலமைச்சருமான ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, நவீன் பட்நாயக்கின் கையைக் கூட வி.கே.பாண்டியன் கட்டுப்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய காட்சி என்றும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவின் எதிர்காலத்தை கட்டுப்படுத்தும் அளவை நினைத்து பார்க்க முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், “ஒன்றுமே இல்லாததை பிரச்னையாக மாற்றுவதில், பாஜக-வினர் கைதேர்ந்தவர்கள். ஆனால், அது ஒடிசாவில் பலிக்காது” என்று கூறியுள்ளார்.