இந்தியா

"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு

"8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த்"-டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு

Sinekadhara

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வருகிற 8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த் நடைபெறும் என்று டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மற்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்னைக்குத் தீர்வுகாண மத்திய அரசுடன் நேற்று சுமார் 8 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதுபோன்ற சூழலில், டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாரதிய கிஸன் யூனியன் விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹெச்.எஸ் லகோவல்( H.S.lakhowal), வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறினார்.

மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமர் கூறுகையில், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு இருதரப்பினரும் ஒத்துக்கொண்டுள்ளனர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விவசாய குழு தலைவர் குர்னாம் சிங் சதோனி, மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், டோல் பிளாசாவையும் விவசாயிகள் ஆக்கிரமிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

இதனிடையே டெல்லி எல்லையில் குவிந்துள்ள விவசாயிகளால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், ஆகவே அவர்களை உடனே அப்புறப்படுத்துமாறு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்படவும், மாஸ்க் அணியவும் வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயக் குழுக்களைத் தொடர்புகொண்டு, திரிணாமுல் காங்கிரஸ் எப்போதும் தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்ததாக அக்கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓபிரியன் தெரிவித்துள்ளார்.