எம்.பி. ஸ்ரீராங்க் பார்னே புதிய தலைமுறை
இந்தியா

அமைச்சர் பதவி - சிவசேனாவும் அதிருப்தி!

PT WEB

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கு ஒரு இணையமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ள அக்கட்சியின் எம்.பி. ஸ்ரீராங்க் பார்னே, பாஜகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் சிவசேனாவுக்கு கேபினட் அமைச்சர் பதவிக்கான தகுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி பதவியேற்பு விழா

மகாராஷ்ட்ராவில் பாஜகவை விட அதிக விழுக்காடு வெற்றியை ஷிண்டேவின் சிவசேனா பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 15 தொகுதிகளில் போட்டியிட்ட ஷிண்டேவின் சிவசேனா 7 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், 28 இடங்களில் போட்டியிட்ட பாஜக 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாகவும் ஷிண்டேவின் சிவசேனா கட்சி எம்.பி. ஸ்ரீராங்க் பார்னே குறிப்பிட்டுள்ளார்.

சிறிய கூட்டணி கட்சிகளுக்கு கேபினட் அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சர் பதவியை வழங்கியிருப்பதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். 5 இடங்களில் வென்றுள்ள சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்திக்கும், 2 எம்.பி.க்களை மட்டுமே பெற்றுள்ள ஜனதா தள கட்சிக்கும் கேபினட் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை ஒதுக்கப்பட்டதில் சிவசேனாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீராங்க் பார்னே தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 மாதத்தில் சட்டப்பேரவை தேர்தலில் இணைந்து பயணிக்க வேண்டியிருப்பதால் சிவசேனாவுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், ஒரு கேபினட் பதவியை எதிர்பார்த்த அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும், தமக்கு ஒதுக்கப்பட்ட இணையமைச்சர் பதவியை வேண்டாம் என மறுத்துவிட்டது.

இரு கட்சிகளுக்கும் பாஜக அளிக்கும் மரியாதை என்ன என்பது அமைச்சர் பதவி ஒதுக்கீட்டிலேயே தெரிந்துவிட்டது என மகாராஷ்ட்ராவில் உள்ள எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.