சுபோத் குமார் சிங் முகநூல்
இந்தியா

அடுத்தடுத்து வெளியான நீட் தேர்வு குளறுபடிகள் - தேசிய தேர்வு முகமை தலைவர் அதிரடி நீக்கம்!

தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் சிங் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

PT WEB

தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் சிங் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு புகார் எழுந்துள்ளது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அம்முகமையின் தலைவர் பதவியிலிருந்து சுபோத் குமார் சிங் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக இந்திய வர்த்தக மேம்பாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரதீப் சிங் கரோலாவுக்கு தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நுழைவுத் தேர்வுகளை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்மட்டக் குழுவில், எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா, ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பிஜே ராவ், சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி, டெல்லி ஐஐடி டீன் ஆதித்யா மிட்டல், கர்மயோகி பாரத் அமைப்பு குழு உறுப்பினர் பங்கஜ் பன்சால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மத்திய கல்வித்துறை இணை செயலாளர் கோவிந்த் ஜெய்ஸ்வால் இக்குழுவின் செயலாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு நடவடிக்கைகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தம், தேசிய தேர்வு முகமையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும் என்றும், இரண்டு மாதங்களில் மத்திய அரசுக்கு அறிக்கையை இக்குழு சமர்பிக்கும் எனவும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் கூறியுள்ளது. சமீபத்தில் நீட் தேர்வில் நிகழ்ந்த குளறுபடியை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.