கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடிமருந்துகள் வைத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தேசியப் பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்கை எடுத்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாகப் புலன் விசாரணை, கைது நடவடிக்கைகள் குறித்து விரிவான விரிவான அறிக்கை தாக்கல் செய்யக் கேரள வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. வன விலங்குகளைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மனிதர்கள் - விலங்குகள் மோதலை தடுப்பது குறித்து ஆய்வு செய்யவும் குழு அமைத்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலத்தின் தலைமை வனக் காவலர் தலைமையில், தென் மண்டல வன விலங்குகள் குற்ற கட்டுப்பாட்டு பிரிவு மூத்த அதிகாரி, அமைதிப் பள்ளத்தாக்கு வனக்காப்பாளர், மன்னார்காடு மற்றும் புனலூர் மண்டல வன அதிகாரி, பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க நீண்டகால நிர்வாக திட்டத்தை கேரள மாநில வனத்துறை சமர்ப்பிக்க பசுமை தீர்பாப்யம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் அமைதிப் பள்ளத்தாக்கு வனக் காப்பாளர் சிறப்பு அதிகாரியாகச் செயல்பட்டு, தகுந்த திட்டங்களை வகுக்க வேண்டும். மேலும் யானையின் மரணத்துக்குக் காரணமானவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கச் செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் கேரள வனத்துறைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 10க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.