நாடாளுமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்யவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டமானது டெல்லியில் சில மணி நேரங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அமித்ஷா, நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு, அஜித் பவார், சிராக் பஸ்வான், அண்ணாமலை, ஓபிஎஸ், பாரிவேந்தர், டிடிவி தினகரன், ஏ சி சண்முகம் போன்ற பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
வருகின்ற ஜூன் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு 3 ஆவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்கவுள்ள சூழலில், நாடாளுமன்ற குழுத்தலைவரை தேர்வு செய்வது, மத்திய அமைச்சரவையை தேர்வு செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் புது முகங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள சூழலில், இது மோடியின் புது யுத்தியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கேரளாவில் எந்த ஆண்டும் இல்லாத வகையில், முதல்முறையாக பாஜக தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளது. ஆக, கேரளாவின் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதேபோல, டெல்லி புது முகமாக களமிறக்கப்பட்ட முன்னான் மத்திய அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ் பெயரும் புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளிலிருந்தும் பல புதுமுகங்கள் மத்திய அமைச்சரவையில் தேர்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தவகையில், பாஜக கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான எண்ணிக்கையில் அமைச்சர் பதவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்னதால் பல புதுமுகங்கள் இடம்பெற்றிருந்தாலும், மூத்த தலைவர்கள் சிலரும், மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்றும் கருதப்படுகிறது.
இந்தவகையில் பாஜக தேசிய தலைவரான நட்டாவின் பதவி காலம் ஏற்கெனவே முடிவடைந்த சூழலில், அவர் மத்திய அமைச்சராக இடம்பெறுவார் என்று தெரிகிறது.
மேலும், நட்டாவின் பாஜக தேசிய தலைவர் பதவியில் சிவராங் சிங் சௌகான் கொண்டுவரப்படுவார் என்றும் தெரிகிறது. ஏனெனில், சிவராங் சிங் சௌகான் தற்போது முடிந்த மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆகவே அவருக்கு தேசிய தலைவர் பதவி அல்லது மத்திய அமைச்சர் என ஏதேனும் ஒன்றை தருவது பாஜகவின் விருப்பமாக உள்ளது.
மேலும், அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஒடிசா மாநிலத்திற்கு முதல்வராக அனுப்பவும் பாஜக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
அதேநேரம் உள்துறை, பாதுகாப்பு, நிதி, வெளியுறவு உள்ளிட்ட முக்கிய துறைகளை பாஜக வைத்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்து தொடர்பாகவும் தற்போது நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மாலை வரை இக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.