பி.எம்.நரேந்திர மோடி பட வெளியீட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. தேர்தல் விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை 'பிஎம் நரேந்திர மோடி' என்ற பெயரில் படமாக ஓமங்குமார் என்பவர் இயக்கியுள்ளார். சந்தீப் சிங் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மோடியாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்தப்படம் நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்தே எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்த நிலையில், தேர்தல் ஆதாயத்திற்காக பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர். கடந்த 5-ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லை.
இதனிடையே பி.எம்.நரேந்திர மோடி பட வெளியீட்டுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பி.எம்.நரேந்திர மோடி பட வெளியீட்டுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அத்துடன் தேர்தல் விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.