இந்தியா

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிந்தைய கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை - விசாரணை ஆணையம்

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிந்தைய கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை - விசாரணை ஆணையம்

webteam

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிந்தைய கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டு கோத்ராவில் நிகழ்ந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் கரசேவகர்கள் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன்விளைவாக குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்தனர். கலவரம் தொடர்பாக விசாரித்த நானாவதி மற்றும் அக்சய் மேத்தா ஆணையத்தின் அறிக்கை குஜராத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரயில் எரிப்புக்கு பிந்தைய கலவரம் திட்டமிட்டு நிகழ்த்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் சிலர் வன்முறையை தூண்டி விட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என விசாரணை ஆணையம் கூறியுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த மோடி தலைமையிலான அப்போதைய மாநில அரசு நடவடிக்கை எடுத்ததாகவும் ஆனால் சில இடங்களில் காவல்துறை அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் அலட்சியத்துடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நானாவதி மற்றும் அக்ஷய் மேத்தா விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையை 2014ஆம் ஆண்டு மாநில அரசிடம் வழங்கியபோதிலும் அது தற்போதுதான் குஜராத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.