கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் கலபுரகி சேடம் நகரில் கோசாலை ஒன்று இருக்கிறது. இறைச்சிக்காக கடத்தப்பட்டு மீட்கப்படும் மாடுகள், விவசாயிகளால் வளர்க்க முடியாத மாடுகள் போன்றவை, இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோசாலையில் பராமரிக்கப்படும், பசு கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பெண் கன்றை ஈன்றது. இந்த கன்றுக்குட்டிக்கு பெயர் சூட்டுவிழாவும் நடந்தது.
கோசாலை அருகே வசிப்பவர்கள், பெயர் சூட்டுவிழாவுக்கு அழைக்கப்பட்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பெயர் சூட்டு விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டனர். கன்றுக்குட்டிக்கு 'துளசி' என்று பெயர் சூட்டப்பட்டது.
பெயர் சூட்டிய பின்னர், தொட்டிலில் போட்டு குழந்தையை தாலாட்டுவது போல, கன்றுக்குட்டியை தொட்டிலில் போட்டு தாலாட்டி பெண்கள் உற்சாகம் அடைந்தனர். கிட்டத்தட்ட வீட்டில் பிறக்கும் குழந்தைக்கு எப்படியெல்லாம் பிறந்தநாள் விழா கொண்டாடுவார்களோ அதேபோல கன்றுக்குட்டிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.