ஆந்திர மாநில முதல்வர் தரும் கொரோனா நோயாளிகள் பற்றிய புள்ளிவிவரங்கள் போலியானவை என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனா பற்றிய விவரங்களைச் சீனா மறைக்கிறது என்கிறார். அதேபோல் வடகொரியா கொரோனா பற்றிய தகவல்களை மறைக்கிறது என்கிறார்கள். இப்படி பல நாடுகள் மீது ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்கள். இது ஒரு உலக பேரிடர் என்பதைக் கடந்து அரசியலாக்கப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிகூட கொரோனா நோயை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள கொரோனா நோயாளிகள் குறித்த புள்ளிவிவரங்கள் போலியானவை மற்றும் தவறான தகவல்கள் நிறைந்தவை என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் அவர் மத்திய அரசுக்கு மாநில அரசு தவறான தகவல்களை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய சந்திரபாபு நாயுடு, "முதலமைச்சர் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரத்திற்கும் சுகாதார செயலாளர் அளித்த விவரங்களுக்கும் சரியாக பொருத்திப் போகவில்லை. முதல்வர் கூற்றின்படி ஆந்திராவில் உள்ள ஏழு ஆய்வகங்களின் மொத்த வசதியைக் கொண்டு ஒரு நாளைக்கு 990 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன எனத் தெரிகிறது. ஆனால் நாட்டில் உள்ள மொத்தம் 263 ஆய்வகங்கள் வைத்து வெறும் 27,256 சோதனைகளை மட்டும்தான் நடத்த முடியும். ஆனால் 12 மணி நேரத்தில் 8,622 சோதனைகள் நடத்தப்பட்டதாக ஆந்திர அரசு கூறுகிறது ”என்று நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் சுகாதார செயலாளர் 16,555 சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறியுத்தை நாயுடு சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இது குறித்து நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திராவின் 84% மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஜெகன்மோகன் திறமையின்மையால் அலட்சியத்தால், பொதுச் சுகாதாரத்தை விட அரசியலில் கவனம் செலுத்தியதால் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார். மேலும் இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் எனக் குறிப்பிட்டுள்ளார்.