இந்தியா

பாஜக கூட்டணியிடம் சாய்ந்த கட்சிகள் - எதிர்க்கட்சியில்லாத அரசாக உருவெடுத்துள்ள நாகாலாந்து

பாஜக கூட்டணியிடம் சாய்ந்த கட்சிகள் - எதிர்க்கட்சியில்லாத அரசாக உருவெடுத்துள்ள நாகாலாந்து

Sinekadhara

நாகாலாந்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்ட போதிலும் அதிக இடங்களில் வெற்றிபெற்று தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி - பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இருப்பினும், வெற்றிபெற்ற கட்சிகள் தேஜமுக - பாஜக கூட்டணியுடன் கைகோர்த்ததில் எதிர்க்கட்சியில்லாத அரசாக உருவெடுத்துள்ளது நாகாலாந்து.

கடந்த மாதம் நடந்துமுடிந்த நாகாலாந்து சட்டசபை தேர்தல் முடிவானது மார்ச் 2ஆம் தேதி வெளியானது. மொத்தம் 60 உறுப்பினர்களைக்கொண்ட சட்டசபை தேர்தலில் முன்பே கூட்டணி அமைத்த தேஜமுக மற்றும் பாஜகவானது 25 மற்றும் 12 என வெற்றிபெற்று மொத்தம் 37 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. பிற அரசியல் கட்சிகளான என்சிபி 7 இடங்களிலும், என்பிபி 5 இடங்களிலும், எல்ஜேபி(ராம் விலாஸ்), என்பிஎஃப் மற்றும் ஆர்பிஐ கட்சிகள் தலா 2 இடங்களிலும், ஜேடி(யு) ஒரு இடத்திலும், சுயேட்சை கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றிபெற்றது.

முதன்முறையாக அதிக கட்சிகள் போட்டியிட்டதில், அதிக கட்சிகள் வெற்றிபெற்ற தேர்தல்களமாகவும் அமைந்தது நாகாலாந்து அரசியல். அதில் எல்ஜேபி மற்றும் ஆர்பிஐ போன்றவை முதன்முறை களத்தில் இறங்கியவை என்பது குறிப்பிடத்தக்கது. தேஜமுக - பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியபோதிலும், இரண்டாவது இன்னிங்கிஸ் இந்தக் கூட்டணிக்கு கட்டுக்கடங்காத ஆதரவுகளை அள்ளி அளித்திருக்கின்றன பிற அரசியல் கட்சிகள்.

எல்ஜேபி, ஆர்பிஐ மற்றும் ஜேடி(யு) கட்சிகள் ஏற்கனவே வெற்றிக்கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கடிதங்களை அளித்திருந்த நிலையில், மூன்றாவது அதிக வெற்றிபெற்ற கட்சியான என்சிபி கடந்த சனிக்கிழமை இந்த கூட்டணியிடம் தனது ஆதரவு கடிதத்தை அளித்திருப்பதாக அக்கட்சியின் புதிய எம்.எல்.ஏவான மொன்பேமோ ஹும்ட்சோ தெரிவித்துள்ளார். அதேபோல் முதன்முறை வெற்றிபெற்றுள்ள என்பிஎஃப் கட்சியின் செயலாளர் அச்சும்பெமோ கிகோனும் தேஜமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்துவருவதாக கூறியுள்ளார்.

நாகாலாந்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தேஜமுக - பாஜக கூட்டணியானது எதிர்க்கட்சி இல்லாத அனைத்துக் கட்சி அரசாங்கமாக உருவாகியுள்ளது. கடந்த 2015 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஆட்சியின் போது எதிர்க்கட்சிகள் இல்லாத அரசாங்கமானது அமைக்கப்பட்டன. ஆனால் அரசு பதவியேற்பதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் இல்லாத முதல் சட்டசபை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.