நாகாலாந்தில் அப்பாவி பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், இறந்தவர்களின் உடல்களை கடத்தவும் மறைக்கவும் முயற்சி செய்ததாகவும் பாதுகாப்பு படையினர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக, அம்மாநில காவல்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில்தான் இவ்விரங்கள் யாவும் கூறப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில், “தாக்குதலின்போது வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த தொழிலாளர்களை அடையாளம் காண எந்த முயற்சியும் செய்யாமலே, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்கிற அதிர்ச்சி தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நாகலாந்து மாநில டிஜிபி ஜான் லாங்குமார் மற்றும் கமிஷனர் ரோவிலட்டு மோர் ஆகிய மூத்த அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கையில், பாதுகாப்பு படையினரின் குற்றங்கள் ‘கொலை மற்றும் தடயங்களை மறைக்க முயற்சி’ என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முழுக்க, பாதுகாப்பு படையினர் "அசாம் ரைபில் 21 பாரா சிறப்பு படை" என குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து பாதுகாப்பு படைதரப்பில், “தீவிரவாதிகள் என சந்தேகப்பட்டு அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டோம்” என வருத்தம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரிகள் தரப்பில் “வாகனத்தில் பயணம் செய்த தொழிலாளர்கள், தங்களை குண்டுகளிலிருந்து தடுத்துக் கொள்ளத்தான் முயற்சித்து உள்ளனரே தவிர, பாதுகாப்பு படையினரை தாக்கவோ அல்லது தாக்கவோ அவர்கள் முயற்சிக்கவில்லை” என அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இப்படியாக வாகனத்தில் வந்தவர்களை விசாரிக்காமல், பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்பது தெளிவுபெற கூறப்பட்டுள்ளது. தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு படை தரப்பில் கொலையை மறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்தடுத்த கட்ட வன்முறை மற்றும் துப்பாக்கிசூடு எப்படி நடந்தது என அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை கூறும் தகவலின்படி, ‘மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் கிராமத்தில் சம்பவம் நடந்ததுள்ளது. உயிரிழந்தோர் திரு (Tiru) பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளிகள். இவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இருந்தபோதிலும் வாகனம் நிற்கவில்லை. இந்த ஒரே காரணத்துக்காக துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் தொல்லை செய்வார்கள் என்கிற அச்சத்தில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதில்லை என பல அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. உடல்களை பாதுகாப்பு படையினர் ஒளித்து, வாகனத்தில் கடத்தி தங்கள் முகாமுக்கு கொண்டுசெல்ல முயன்றதை கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் வன்முறையில் இறங்கியதால், மீண்டும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளர். இரண்டாவது துப்பாக்கி சூட்டில் மேலும் 7 நபர்கள் உயிரிழந்தனர். மற்றும் பலர் காயமடைந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது துப்பாக்கிசூடுக்கு பிறகு, பாதுகாப்பு படையினர் அசாம் மாநில எல்லை நோக்கி தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு மற்றும் படுகாயங்களை கண்டு மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அசாம் ரைபில்ஸ் முகமையை சூழ்ந்து தாக்கியதாகவும், அப்பகுதியை கிட்டத்தட்ட 600 கிராம மக்கள் கட்டைகள், கற்கள் கொண்டு தாக்கியதாகவும், 3 கட்டடங்களுக்கு தீ வைத்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியதில், மேலும் ஒரு கிராமவாசி மரணமடைந்தார். மேலும் பலர் காயம் அடைந்ததாக ஜான் லாங்குமார் மற்றும் ரோவிலட்டு மோர் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி: நாகாலாந்து துப்பாக்கிச்சூடு - பிரதமர் மோடி ஆலோசனை
விரிவான இந்தத் தகவல்கள் அளிக்கப்பட்டும், இதுவரை சம்பந்தப்பட்ட பாதுகாப்புப்படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. மூத்த அதிகாரி தலைமையில் விசாரணை நடக்கும் என அசாம் ரைபில்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாநில முதல்வர் ரியோ சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், “பாதுகாப்பு படையினர் நாகலாந்து மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டனர். எனவே எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்படவேண்டும்” என வட-கிழக்கு மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள், எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
- கணபதி சுப்ரமணியம்