என்.பிரசாந்த் எக்ஸ் தளம்
இந்தியா

கேரளா|’கலெக்டர் சகோதரர்’ என அழைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்.. யார் இந்த என்.பிரசாந்த்? பின்னணி?

கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயதிலக்கை சமூக வலைதளம் மூலம் விவசாயத் துறைக்கான சிறப்புச் செயலாளர் என்.பிரசாந்த் விமர்சனம் செய்துவந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவரையும் கேரள அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

Prakash J

கேரளாவில் விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக கேரள மாநில தொழில்துறை இயக்குநர் கே.கோபாலகிருஷ்ணன், விவசாயத் துறைக்கான சிறப்புச் செயலாளர் பிரசாந்த் ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ’மல்லு இந்து அதிகாரிகள்’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்களை இணைத்து, அதன் குழுவின் அட்மின் ஆக கோபாலகிருஷ்ணன் இருந்தார். இது அதிர்வலைகளை எழுப்பியதைத் தொடர்ந்து, இதுகுறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அதிகாரிகள் விசாரணையில், கோபாலகிருஷ்ணன் மொபைல் போன் 'ஹேக்' செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

மறுபுறம், கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயதிலக்கை சமூக வலைதளம் மூலம் விவசாயத் துறைக்கான சிறப்புச் செயலாளர் என்.பிரசாந்த் விமர்சனம் செய்துவந்தார். மேலும் தனது உத்தரவுகளை மதிக்காத கீழ்நிலை அதிகாரிகளின் எதிர்காலத்தை ஜெயதிலக் சீர்குலைப்பதாகவும், அவரது மனநிலை சரியில்லை எனவும் பிரசாந்த் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக ஜெயதிலக் புகார் அளித்து இருந்தார். இதனையடுத்து பிரசாந்த்தையும் மாநில அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இதுகுறித்து என்.பிரசாந்த் பேட்டியொன்றில், ”இது எனக்கு ஒரு புதிய அனுபவம். அரசாங்கத்தை அல்லது அதன் கொள்கைகளை விமர்சிப்பது தவறு. நான் அப்படி எதுவும் செய்தேன் என்று யாரும் நம்ப மாட்டார்கள். குறிப்பாக இட்டுக்கட்டப்பட்ட அறிக்கைகள் தொடர்பான ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. போலியான அறிக்கைகளை உருவாக்குவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல, ஆனால், அத்தகைய செயல்களை விமர்சிப்பது விளைவுகளுக்கு வழிவகுக்கும். அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இந்த உரிமைக்குள் நான் எந்த எல்லையைத் தாண்டியிருக்கலாம் என்று எனக்குத் தெரியவில்லை. உத்தரவைப் பார்க்க வேண்டும். பின்னர் எனது அடுத்தகட்டம் குறித்து சிந்திப்பேன். நான் ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பிறக்கவில்லை. எனக்கு வேறு ஆர்வங்களும் சேவைகளும் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்| களத்தில் யார் யார்?.. அநுர குமராவுக்கு சிறப்பு மெஜாரிட்டி ஏன் அவசியம்?

இந்த விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பாகப் பேசப்படும் நிலையில், இதற்குப் பின்னணியில் அரசியலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிபிஎம் தலைவரும், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சருமான ஜெ மெர்சிக்குட்டி அம்மா, தனக்கு எதிரான அரசியல் சதியில் பிரசாந்த் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

யார் இந்த என்.பிரசாந்த்?

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரியைச் சேர்ந்தவர் என்.பிரசாந்த். திருவனந்தபுரத்தில் உள்ள லயோலா பள்ளியிலும், அரசு சட்டக் கல்லூரியிலும் பயின்ற அவர், 2007இல் ஐஏஎஸ்ஸில் சேர்ந்தார். பின்னர் பல துறைகளில் பணியாற்றிய பிறகு, அவர் 2015இல் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்தச் சமயத்தில்தான் அவர் சமூக ஊடகத் தொடர்புகளின் பணிகளுக்காக, 'கலெக்டர் சகோதரர்' (collector-bro) என்று வர்ணிக்கப்பட்டார். அப்போது, 14 ஏக்கர் ஏரியை சுத்தம் செய்ய மக்களிடம் உதவிகேட்ட ஃபேஸ்புக் செய்தி கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து, கோழிக்கோடு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்திய அனுபவத்தை விவரிக்கும் வகையில் புத்தகம் ஒன்றை எழுதினார்.

இதையும் படிக்க: பரப்புரையில் துப்பாக்கிச் சூடு| உச்ச பாதுகாப்பில் ட்ரம்ப் வீடு.. தோட்டத்தைச் சுற்றிவரும் ரோபோ நாய்!