பிரதமர் மோடி pt web
இந்தியா

மோடி தங்கிய மைசூரு விடுதி! ரூ.80 லட்சம் பாக்கி.. போட்டிபோடும் அரசுகள்.. சட்ட உதவியை நாடும் ஹோட்டல்!

பிரதமர் நரேந்திர மோடி தங்கியிருந்த நட்சத்திர விடுதிக் கட்டணம் ரூ.80.6 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும் அது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் விடுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். அதாவது, தேசிய புலிகள் காப்பகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை இணைந்து மைசூருவில் நடத்திய பந்திப்பூர் புலிகள் காப்பக பொன் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அங்குச் சென்றிருந்தார். மாநில வனத்துறை சார்பில், ஏப்ரல் 9 முதல் 11ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த திட்டத்துக்கு ரூ.3 கோடி செலவானது. இதனை மத்திய அரசு முழுவதும் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில்தான், மத்திய அரசிடம் இருந்து இதுதொடர்பான அறிவுறுத்தல் கிடைக்கப்பெற்றுள்ளது.

உண்மையில் நிகழ்ச்சிக்கான செலவு ரூ.6.33 கோடியாக ஆகியிருக்கிறது. அதேநேரத்தில் இந்த நிகழ்ச்சிக்காக, மத்திய அரசிடமிருந்து வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், மீதித் தொகையான ரூ.3.33 கோடி அனுப்பப்படவில்லை. இதுதொடர்பாக இரு அரசுகளும் (மத்திய - மாநில) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பிரதமர் மோடி பங்கேற்பதால் பல கூடுதல் வசதிகள் செய்யப்பட்டதால் நிகழ்ச்சி செலவு திட்டமிடப்பட்டதை விடவும் இரண்டு மடங்காகிவிட்டதால், செலவுத் தொகை அனுப்புமாறு மாநில வனத்துறை தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டே இருந்தது. ஆனால், அந்தத் தொகையை மாநில அரசே செலுத்த வேண்டும் என்று மத்திய அரசின் தேசிய புலிகள் காப்பகக்கழகத்திடமிருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டது.

அதுபோல, மைசூருவில் உள்ள ராடிசன் ப்ளூ பிளாஸா விடுதிக் கட்டணத்தையும் மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: IPL| MI தொடர் தோல்விக்கு குடும்ப பிரச்னை காரணமா.. மனைவியைப் பிரிகிறாரா ஹர்திக் பாண்டியா?

தொடர்ந்து, மாநில அரசிடமிருந்து, விடுதிக் கட்டணம் உள்ளிட்ட இதரக் கட்டணங்களை செலுத்துமாறு கடிதம் அனுப்பப்பட்டும், அதற்கும் இதுவரை மத்திய அரசிடமிருந்து பதில் கிடைக்கப் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடைய, ராடிசன் ப்ளு பிளாசாவின் நிதித் துறை பொது மேலாளர், வனத்துறைக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறார். 12 மாதங்கள் கடந்த பிறகும், விடுதியில் தங்கியிருந்தது உள்ளிட்ட நிலுவையில் உள்ள ரூ.80.6 லட்சத்தை செலுத்தவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். எனினும், விடுதிக் கட்டணம் கட்டப்படாமலேயே இருந்துள்ளது. இதற்கு வருடத்துக்கு 18 சதவீத வட்டியும் விதிக்கப்பட்டு, கூடுதலாக 80 லட்சத்துடன் 12.09 லட்சத்தையும் இணைத்து அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால், விடுதியின் நிர்வாகச் செலவுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நட்சத்திர விடுதி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால், ஜூன் 1, 2024க்குள் நிலுவையை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விடுதி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து டாக்டர் பசவராஜ், “இது மத்திய அரசின் திட்டம் என்ற காரணத்திற்காகவே மீதித் தொகையை மாநில அரசு செலுத்த மறுத்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”காந்தி மற்றும் அம்பேத்கர் இடையிலான விவாதம் சுவாரஸ்யமாக இருக்கும்” - நடிகை ஜான்வி கபூர்