குற்றம் web
இந்தியா

கொல்கத்தா: வாடகைக்கு இருந்த வீட்டில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நேபாள தம்பதி?

கொல்கத்தா - ஒரு நேபாளி தம்பதி வாடகைக்கு வீடெடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் ஊருக்கு போவதாக அங்கிருந்து புறப்பட்டு சென்ற நிலையில், அந்த வீட்டின் ஓனர் அந்த வீட்டை சுத்தம் செய்ய முயன்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்து எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Jayashree A

கொல்கத்தாவின் அருகில் உள்ள பாகுயாட்டி என்ற கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அதில் நான்காவது மாடியில் இருக்கும் ஒரு வீட்டின் உரிமையாளர் கோபால் முகர்ஜி. இவர் வேறொரு இடத்தில் வசித்து வருவதால் பாகுயாட்டில் இருக்கும் தனது வீட்டை வாடகைக்கு விட நினைத்துள்ளார். அப்படி 2018ம் ஆண்டு ஒரு நேபாள தம்பதியினருக்கு ஐந்து வருட குத்தகைக்கு பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு தனது வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அந்த நேபாள தம்பதியினர், “நாங்கள் எங்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வருகிறோம்” என கோபால் முகர்ஜியிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இரண்டு வருடங்கள் ஆகியும் போனவர்கள் திரும்ப வரவில்லை. இருப்பினும் கோபால் முகர்ஜிக்கு அவர்களிடமிருந்து வாடகை தவறாமல் வந்துள்ளது. அதனால் கோபால் முகர்ஜியும் அவர்கள் திரும்பி வராததை பெரிதாக நினைக்கவில்லை.

எலும்புகூடு இருந்த டிரம்

இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக அவர்களிடமிருந்து வாடகையானது சரியாக வராததால் கோபால் முகர்ஜி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அதற்கு அந்த நேபாள தம்பதியினர் தாங்கள் கஷ்டத்தில் இருப்பதாகவும் சேர்த்து வாடகை தருவதாக கூறிவந்துள்ளனர். இருப்பினும் அவர்களிடமிருந்து சொன்னது போல் வாடகை வரவில்லை. இதில் சமீபத்தில் கோபால் முகர்ஜி அவர்களை மீண்டும் தொடர்பு கொண்ட சமயம் அவர்களின் மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது.

அதனால் நேபாள தம்பதி வசித்து வந்த வீட்டின் பூட்டை உடைத்து குடியிருப்பை சுத்தம் செய்துவிட்டு, மீண்டும் வேறொருவருக்கு வீட்டை வாடகைக்கு விட நினைத்த கோபால் முகர்ஜி, அதற்கான வேலையில் இறங்கி உள்ளார். அதில் கடந்த செவ்வாய் அன்று நேபாளி தம்பதியினர் இருந்த வீட்டை சுத்தம் செய்த வேலையாட்கள், கழிப்பறையில் சிமெண்டால் சீல் செய்யப்பட்ட நீலநிற பிளாஸ்டிக் தண்ணீர் டிரம் ஒன்று இருப்பதைக் கண்டுள்ளனர். சந்தேகத்துடன் அந்த சீல் செய்த டிரம்மை உடைத்து பார்க்கையில் துர்நாற்றம் வீசியபடி ஒரு எலும்புக்கூடு அதில் இருந்துள்ளது. பயந்து அலறிய வேலையாட்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த ஜகத்பூர் போலீசார் வீட்டின் உரிமையாளரான கோபால் முகர்ஜியிடம் விசாரணையை ஆரம்பித்தனர்.

“அந்த நேபாள தம்பதியினர் யார் என்று எனக்கு தெரியாது. அவர்களுக்கு முப்பது வயதிற்குள் இருக்கும். அவர்களின் பெயர் கூட நினைவில் இல்லை. வாடகை சரியாக வந்ததால் அவர்களை பற்றிய சந்தேகம் ஏதும் எனக்கு ஏற்படவில்லை” என்று போலீஸிடம் கூறிய கோபால் முகர்ஜி, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட வீட்டின் பத்திரத்தை தேடிக்கொண்டிருக்கிறாராம். மேலும் தற்போது பயன்பாட்டில் இல்லாத அவர்களின் மொபைல் எண் மற்றும் வங்கி பரிவர்த்தனை எண்ணை போலீசாரிடம் தந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனிடையில், டிரம்மிற்குள் இருந்த எலும்புகூட்டின் கைகளில் வளையல் இருந்துள்ளது. ஆகவே இறந்தது பெண்ணாக இருக்கலாம் என்று எண்ணுகின்றனர். ஆனால் பிரேத பரிசோதனை மட்டுமே இறந்தது ஆணா அல்லது பெண்ணா என்பதை உறுதிப்படுத்தமுடியும் என்று காவல்துறை கூறியுள்ளது.