இமயமலையில் 'எட்டி' பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாக கூறி இந்திய ராணுவத்தினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்
இமயமலைகளில் பனிமனிதன் வாழ்ந்து வருவதாக நீண்ட காலமாகவே கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை. நேபாள மக்களின் நம்பிக்கையிலும் பனிமனிதன் என்பது உண்டு என்றே கூறப்படுகிறது.
எட்டி எனப்படும் அந்த மனிதனை பனிமலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களும் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சராசரி மனிதனை விட பெரிய அளவில் பனி மனிதம் இருப்பான் என்றும் சொல்லப்படும் நிலையில் பனி மனிதன் குறித்து பல மர்மமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
இந்நிலையில் எட்டி பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாக கூறி இந்திய ராணுவத்தினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.மாகலு – பருண் எல்லைப் பகுதியில் மர்மமான பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாகவும் இது 32x15 இன்ஞ் அளவு கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பனிமனிதன் தகவலை பகிர்ந்துள்ளதால் பலரும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பிராங்க் பதிவு என்றும் ட்விட்டர் பக்கத்தை யாராவது ஹேக் செய்து விட்டார்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்