பிரதாப் சிம்ஹா ட்விட்டர்
இந்தியா

நாடாளுமன்ற ‘பாஸ்’ வழங்கிய சர்ச்சை: ”நான் யார்...” பதிலளித்த பாஜக எம்பி!

”நான் தேச பக்தனா, தேச துரோகியா என்பதை கர்நாடக மக்கள் முடிவு செய்வார்கள்” என பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா தெரிவித்துள்ளார்.

Prakash J

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, பிற்பகலின்போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்த இருவர், வண்ணப் புகைக் குப்பிகளை வீசினர். எம்பிக்கள் சிலர், அவர்கள் இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அதற்குள் அவை காவலர்கள் விரைந்து வந்து அவர்களைப் பிடித்துச் சென்றனர். அவர்கள், கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவைச் சேர்ந்த சாகர் சர்மா என தெரிய வந்தது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு, நாடாளுமன்ற அவைகளில் அமளியில் ஈடுபட்டனர். மேலும், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்ற விதிமீறலுக்குக் காரணமாக இருந்த பிரதாப் சிம்ஹா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். இப்படி, தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றம்

இந்த நிலையில், வண்ணப் புகைக் குப்பிகளை வீசிய விவகாரத்தில் இருவருக்கும் பரிந்துரை கடிதம் (பாஸ்) அளித்தது, மைசூரு-குடகு மக்களவைத் தொகுதி பாஜக எம்பியான பிரதாப் சிம்ஹா என விசாரணையில் தெரியவந்தது.

‘பாஸ்’ வழங்கியது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் பிரதாப் சிம்ஹா அண்மையில் விளக்கம் அளித்தார். அதில், “மனோரஞ்சனின் தந்தை எனது தொகுதியில் வசிக்கிறார். அவர் கேட்டுக்கொண்டதால் பாஸ் வழங்கினேன். பார்வையாளர் அனுமதிச் சீட்டு பெற்ற மனோரஞ்சன், சாகர் சர்மாவை எனக்குத் தெரியாது. அவர்களுக்கும் எனக்கும் தொடர்பும் கிடையாது’’ எனத் தெரிவித்திருந்தார். எனினும் அவருக்கு எதிராக கர்நாடகா முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க: ரூ.700க்கு Thar car வாங்க ஆசைப்பட்ட சிறுவன்.. ருசிகர பதிலளித்த ஆனந்த் மகேந்திரா!

அதேநேரத்தில், பாதுகாப்பு விதிமீறல் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சிம்ஹாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சமீபத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் சிம்ஹா, “கடந்த 9 ஆண்டுகளாக மைசூரு- குடகு மக்களுக்குச் சேவையாற்றி வருகிறேன். நாட்டுக்காகவும் இந்து மதத்தின் மேம்பாட்டுக்காவும் அயராது பாடுபட்டு வருகிறேன். நான் தேச பக்தனா, தேசத் துரோகியா என்பது மைசூரு மலையில் அமர்ந்திருக்கும் தாய் சாமுண்டீஸ்வரி, பிரம்மகிரியில் அமர்ந்திருக்கும் காவிரி தாய்க்கு தெரியும். நான் யார் என்பதை அவர்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன். இந்த விவகாரத்தில் என் மீதான விமர்சனத்துக்கு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தல் ஓட்டுகள் பதில் சொல்லும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஒடிசா: தோட்டத்தில் காலிஃபிளவரைப் பறித்த தாய்... மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த மகன்!