இந்தியா

’என் மனைவி மனித வெடிகுண்டு’: ஏர்போர்ட்டுக்கு போன் செய்த சென்னை இளைஞருக்கு டெல்லியில் சிறை!

’என் மனைவி மனித வெடிகுண்டு’: ஏர்போர்ட்டுக்கு போன் செய்த சென்னை இளைஞருக்கு டெல்லியில் சிறை!

webteam

’என் மனைவி மனித வெடிகுண்டு, நடுவானின் விமானத்தை தகர்க்கப் போகிறார்’ என்று சொன்ன சென்னை இளைஞர், டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் கடந்த 10 வருடமாக தோல் தொழிற்சாலை நடத்தி வருபவர் நஸ்ருதீன். பீகாரைச் சேர்ந்தவர். அவரது தொழிற்சாலையில் சபீனா என்பவர் வேலை பார்த்தார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சபீனா மீது காதல் கொண்ட நஸ்ருதீன், அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவரை வற்புறுத்தி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வைத்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சுகமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் பணப்பிரச்னை தொடர்பாக முட்டல் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து அரபு நாட்டுக்குச் சென்று வேலை செய்ய முயன்றார் சபீனா. அவர் முயற்சிக்கு பலன் கிடைத்தது. அங்கு வேலை கிடைத்ததை அடுத்து, குழந்தைகளை நஸ்ருதீனிடம் விட்டுவிட்டு அரபு நாடு செல்ல முடிவு செய்தார். இதை ஏற்கவில்லை நஸ்ருதீன். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம். பின்னர் கடந்த 8 ஆம் தேதி, சத்தம் போடாமல் டெல்லி சென்ற சபீனா, அங்கிருந்து வெளிநாடு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.

கோபமடைந்த நஸ்ருதீன், கூகுளில் டெல்லி விமான நிலையத்தின் ஃபோன் நம்பரை தேடி கண்டுபிடித்து எடுத்தார். அங்கு போன் செய்த அவர், ‘என் மனைவி, துபாய் அல்லது சவுதி அரேபியாவுக்கு விமானத்தில் செல்ல இருக்கிறார். அவர் மனித வெடிகுண்டு. நடுவானில் விமானத்தை வெடிக்க செய்ய இருக்கிறார்’ என்று கூறிவிட்டு ஃபோன் தொடர்பைத் துண்டித்து விட்டார். இப்படி செய்தாலாவது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவார்கள் என்று நம்பினார், நஸ்ருதீன்.


 
இதையடுத்து டெல்லி விமான நிலையம் பரபரப்பானது. துபாய், சவுதி, ரியாத் செல்லும் விமானங்களில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். பின்னர் அது வழக்கம் போல புரளி என்று தெரிய வந்ததும் விட்டுவிட்டனர். 

இந்நிலையில் ஃபோன் செய்த நபரை டெல்லி குருகிராம் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். நேற்று முன்தினம்தான் நஸ்ருதீன் சிக்கினார். பிறகுதான் இந்த கதை போலீசாருக்குத் தெரியவந்தது. அவரை கைது செய்துள்ள போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.