இந்தியா

“எங்கள் குடும்பமும் விதிவிலக்கல்ல; தாமதமான நீதியால் பாதிக்கப்பட்டோம்”- நீதிபதி பானுமதி

“எங்கள் குடும்பமும் விதிவிலக்கல்ல; தாமதமான நீதியால் பாதிக்கப்பட்டோம்”- நீதிபதி பானுமதி

webteam

தாமதமாகும் நீதியால் தன் குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி நாளையுடன் ஓய்வு பெறவுள்ளார். இதனையடுத்து அவருக்கு நேற்று பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.இதில் நீதித்துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர், நீதிபதிகள் என பலர் கலந்துகொண்டு நீதிபதி பானுமதியின் கடந்த கால நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். ஒரு சிறந்த நல்ல நீதிபதியை தாங்கள் இழப்பதாக பலரும் நெகிழ்ச்சியுடன் உரையாற்றினர்.

பின்னர் தன்னுடைய அனைவரின் முன்பும் பேசிய நீதிபதி பானுமதி, நான் தமிழகத்தில் ஒரு பின் தங்கிய மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பிறந்தேன். எனக்கு இரண்டு வயது இருக்கும்போது என் தந்தையை பேருந்து விபத்தில் இழந்தேன். பிறகு என் தாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால் சரியான உதவி இல்லாததால் இழப்பீடு எங்களை சேரவில்லை. நான், விதவையான என் அம்மா, என்னுடைய இரண்டு சகோதரிகள், நாங்களே தாமதமாகும் நீதிக்கு சாட்சியானவர்கள். நாங்களே பாதிக்கப்பட்டவர்கள். நாங்கள் கடைசி வரை அந்த இழப்பீட்டு தொகையை வாங்கவில்லை எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் என்னுடைய பயணத்திற்கும் எனக்கும் உறுதுணையாக இருக்கும் என் கணவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வாழ்க்கை முழுவதும் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் என் கணவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். பணியில் நான் நேர்மையாக செல்ல என்னை வழிநடத்தியவர் என் கணவர். விரைவில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்புகிறேன். அந்த நல்ல செய்தியுடன் இந்தியா கொரோனாவில் இருந்து மீண்டு வழக்கமான பணிகளுக்கு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்துகொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

நாளையுடன் ஓய்வுபெற உள்ள நீதிபதி பானுமதி 30 வருடங்களுக்கு மேலாக நீதித்துறையில் பணியாற்றியுள்ளார். 2014ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வந்துள்ளார் பானுமதி. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பின்னர் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.