இந்தியா

30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் அமைச்சர் சரண்

30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் அமைச்சர் சரண்

webteam

முசாபர்பூரில் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பீகார் முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மா நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

பீகார் மாநிலம் முசாபர்பூரில் அரசின் நிதியுதவியில் இயங்கும் தங்கும் விடுதி ஒன்றில் 44 சிறுமிகள் தங்கி இருந்தனர். இதை பிரிஜேஸ் தாக்கூர் என்பவர் நடத்தி வந்தார். அங்கிருந்த சிறுமிகளில் 30 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தகவல்கள் வெளியானது. இதில் சில சிறுமிகளுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பானது, 

இந்த வழக்கில், விடுதியை நடத்திய பிரிஜேஷ் தாக்கூர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக் கப் பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு பீகார் மாநில சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்திரசேகர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சி கள் குற்றம்சாட்டின. இதனால் மஞ்சு வர்மா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதைதொடர்ந்து, தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது அனுமதி பெறாத கள்ளத்துப்பாக்கிகள் வீட்டில் கிடைத்தன. இதன் அடிப்படையில் கணவன் - மனைவி இருவருக்கும் எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் தன்னை இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க பாட்னா உயர் நீதிமன்றத்தில் மஞ்சு வர்மா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போலீசார் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா பெகுசராய் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

ஆனால் மஞ்சு வர்மா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பீகார் அரசுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யபப்ட்ட நிலையில் இன்னும் அவரை கைது செய்யாதது ஏன்? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து மஞ்சு வர்மாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரை போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் பெகுசராய் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்துள்ளார்.