இந்தியா

மற்றொரு கொலை வழக்கில் மீண்டும் கைதான ‘மட்டன் சூப்’ ஜூலி

மற்றொரு கொலை வழக்கில் மீண்டும் கைதான ‘மட்டன் சூப்’ ஜூலி

webteam

தொடர் சயனைடு கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜூலியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, தாமரைச்சேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். பெற்றோர் கட்டாயத்தின் பேரில் ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜுலி. ஜூலியின் குடும்பத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். ஜூலியின் மாமியார் அன்னம்மாவில்(2002) தொடங்கிய இந்த மர்ம மரணம், மாமனார் டாம் தாமஸ்(2008), கணவர் ராய் தாமஸ்(2011), அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ(2014) என தொடர்ந்தது. ஜூலி மாமனாரின் அண்ணன் மகன் சாஜூவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத பெண் குழந்தை 2016-இல் உயிரிழந்தனர்.

தொடர்ச்சியான இந்த உயிரிழப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த உயிரிழப்புகளுக்கு இடையே, 2017-ஆம் ஆண்டு ஜூலியும் சாஜூவும் திருமணம் செய்து கொண்டனர். அப்போதுதான், டாம் தாமஸின் இளைய மகனுக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து, போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஜூலி குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி அனைவரையும் கொலை செய்ய ஜூலி திட்டம் தீட்டியது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த கொலைகள் அனைத்தும் சொத்துக்காகவும் தான் விரும்பிய சாஜூவை திருமணம் செய்வதற்காகவும் ஜூலி நிகழ்த்தியுள்ளார். மட்டன்சூப்பில் சயனைடு கலந்து இந்த கொலைகளை அவர் செய்துள்ளார். இந்த சீரியல் கொலை தொடர்பாக ஜூலியை கைது செய்து, கேரள சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமையோடு ஜூலியின் போலீஸ் காவல் முடிவடைந்தது. இதையடுத்து ஜூலி, தனது தற்போதையை கணவர் சாஜூவின் முதல் மனைவியை சயனைடு கொடுத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக மீண்டும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

இதற்காக அவர் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரிப் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஏழு நாட்கள் போலீஸ் காவல் வழக்கி தாமரைசேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூலியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தாமரைசேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.