இந்தியா

காவி உடையணிந்து சிவயாத்திரையில் பங்கேற்ற 15 முஸ்லீம்கள்!

காவி உடையணிந்து சிவயாத்திரையில் பங்கேற்ற 15 முஸ்லீம்கள்!

webteam

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, சிவ யாத்திரையில் 15 முஸ்லிம்கள் கலந்துகொண்ட சம்பவத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித் துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிவ பக்தர்கள் கன்வர் யாத்ரா என்ற பெயரில் பாபா தாமில் உள்ள பைத்யாநாத் ஜோதிர்லிங் கோயிலுக்கு யாத்திரை செல்வது வழக்கம். அப்படி செல்பவர்களை கன்வாரியாஸ் என்று அழைப்பார்கள். தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த குஷாஹரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வருடந்தோறும் இந்த யாத்திரை செல்வது வழக்கம். காவி உடையணிந்து செல்லும் இவர்கள் பீகார் மாநிலம், சுல்தான்கன்ஜ் என்ற இடத்தில் கங்கையில் நீர் எடுத்து 104 கி.மீ., நடந்து பாபா தாம் கோயிலுக்கு செல்வார்கள். இந்த நீரால் சிவனுக்கு அபிஷே கம் செய்யப்படுவது வழக்கம்.

இந்த வருடமும் இந்த யாத்திரை தொடங்கியது.  70 பேர் கொண்ட இந்த யாத்திரையில்  15 பேர் முஸ்லிம்கள். கிராமத் தலைவரான நிசாம் அன் சாரி தலைமையில் இதில் பங்கேற்ற முஸ்லிம்கள், காவி உடை அணிந்து தங்கள் சொந்தச் செலவில் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதுபற்றி அன்சாரி கூறும்போது, ’எங்கள் கிராமத்தில் அனைத்து மத சடங்குகளிலும் மற்ற மதத்தினர்கள் கலந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இது போன்ற பங்கேற்புகள் சமூகத்தில் இணைந்து செயல்பட வழிவகுக்கும். மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்’ என்றார்.

இது பலரது பாராட்டை பெற்றுள்ளது.