வாக்கு எண்ணிக்கை அன்று பிறந்த தன் மகனுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை, சூட்டியுள்ளார் இஸ்லாமிய பெண் ஒருவர்.
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள பர்சாபூர் மஹ்ரார் கிராமத்தைச் சேர்ந்தவர், மைனாஸ் பேகம். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 23 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, அமோக வெற்றி பெற்றதால், மோடியின் பெயரை தனது குழந்தைக்கு சூட்ட முடிவு செய்தார் பேகம்.
இதுபற்றி தனது தோழிகள் மற்றும் உறவினர்களிடம் சொன்னதும் அவர்கள் பேகத்தின் மனதை மாற்ற முயன்றனர். பின்னர் துபாயில் இருக்கும் தனது கணவர் முஷ்டாக் அகமதுவிடம் தனது ஆசையை தெரிவித்தார். முதலில் யோசித்த அவர், பிறகு மனைவியின் ஆசையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தனது மகனுக்கு ’நரேந்திர தாமோதரதாஸ் மோடி’ என்று பெயர் சூட்டியுள்ளார் பேகம்.
இந்த பெயரை பதிவு செய்ய இருக்கிறார் அவர். அதற்காக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘’முத்தலாக் உள்ளிட்ட விஷயங்களில் இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவாக மோடி செயல்படுகிறார். சமையல் எரிவாயு, கழிவறை கட்டுவதற்கான பொருளாதார உதவி உட்பட பல்வேறு நலதிட்டங்களை செய்துவருகிறார். அதனால் அவர் பெயரை என் மகனுக்கு சூட்டியுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.