இந்தியா

கேரளா: பாலின பேதமின்றி மாணவர்களுக்கு சீருடை - போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமிய அமைப்பு

கேரளா: பாலின பேதமின்றி மாணவர்களுக்கு சீருடை - போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமிய அமைப்பு

EllusamyKarthik

பாலின பேதத்தை ஒழிக்க கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இயங்கி வரும் பலுசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலின பேதமின்றி மாணவ, மாணவியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை அணியும் வழக்கத்தை கடைபிடிக்கும் புதிய நடைமுறை அமல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதனை எதிர்த்து அங்கு இயங்கி வரும் இஸ்லாமிய அமைப்புகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

அந்த மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பாவூர் பகுதியை சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் மாணவ - மாணவியருக்கு பாலின பேதமின்றி ஒரே மாதிரியான சீருடை அணியும் வழக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. அதையடுத்து பலுசேரி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. பள்ளியின் உத்தரவை ஏற்று சுமார் 200- க்கும் மேற்பட்ட மாணவிகள் சட்டை மற்றும் அரைக்கால் சட்டை (ஷார்ட்ஸ்) சீருடை அணிந்து பள்ளிக்கு வந்துள்ளனர். 

இந்த நிலையில்தான் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு உட்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் மேற்கொண்டுள்ளன. ‘பெண்களின் ஆடை சுதந்திரத்தில் தலையிடும் நடவடிக்கை இது’ என கண்டனம் தெரிவித்ததாக தெரிகிறது. 

தொடர்ந்து அந்த பள்ளியின் முதல்வர், மாணவர்கள் யாரையும் இந்த சீருடை தான் அணிய வேண்டும் என பள்ளி தரப்பில் கட்டாயப்படுத்தவில்லை என விளக்கம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

பாலின பேதமின்றி மாணவ, மாணவியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை அணியும் நடவடிக்கைக்கு மாணவர்கள் மற்றும் அரசு தரப்பில் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது.