இந்தியா

பாஜக வெற்றியை கொண்டாடிய முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை - உ.பி.யில் பயங்கரம்

பாஜக வெற்றியை கொண்டாடிய முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை - உ.பி.யில் பயங்கரம்

ஜா. ஜாக்சன் சிங்

உத்தரபிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடிய முஸ்லிம் இளைஞரை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபர் அலி (25). பாஜகவின் தீவிர ஆதரவாளராக இவர் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக சார்பில் நடைபெற்ற பிரசாரங்களில் பாபர் அலி தொடர்ந்து பங்கேற்று வந்துள்ளார். இதனால் அவரது பகுதியில் இருந்த இஸ்லாமிய மக்கள் இடையே அவருக்கு எதிர்ப்பு வலுத்தது.

பாஜகவுக்கு ஆதரவாக இருக்க வேண்டாம் எனவும் அவருக்கு சிலர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால், அவற்றை எல்லாம் பாபர் அலி சட்டை செய்யவில்லை.

இந்நிலையில், உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி அடைந்ததை இனிப்புகள் கொடுத்தும், பட்டாசுகளை வெடித்தும் அவர் கொண்டாடி இருக்கிறார். இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர் மீது ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்த சூழலில், கடந்த 20-ம் தேதியன்று வேலைக்கு சென்றுவிட்டு பாபர் அலி திரும்பிய போது, ஒரு கும்பல் வழிமறித்து இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து பாபர் அலியை கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே, அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டை உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.