இந்தியா

குருக்ராமில் இஸ்லாமிய இளைஞர் மீது தாக்குதல் : ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்ல சொல்லி அடி, உதை

webteam

குருக்ராமில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

25 வயதான இளைஞர் முகமது பர்கத் தையல் கற்றுக்கொள்வதற்காக இம்மாத தொடக்கத்தில் குருக்ராமிற்கு வந்துள்ளார்.  நேற்று இரவு 10 மணியளவில் அருகில் உள்ள மசூதிக்கு சென்று தொழுகை செய்துவிட்டு அவர் கடைக்கு திரும்பியுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் இந்த பகுதியில் இஸ்லாமியர்கள் தலையில் குல்லா அணியக்கூடாது எனவும் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வேண்டும் எனக்கூறியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதையடுத்து, தாக்குதலுக்கு ஆளான பர்கத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மத வெறுப்புகளை ஊக்குவிப்பது, கொடூர அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 

இதுகுறித்து பர்கத் கூறுகையில், “நான் தொழுகைக்கு சென்று விட்டு கடைக்கு திரும்பிகொண்டிருந்தேன். அப்போது நான்கு பேர் மோட்டார் சைக்கிளிலும் இரண்டுபேர் நடந்து வந்தும் என்னை வழிமறித்தனர். இந்த பகுதியில் குல்லா அணியக்கூடாது என கழட்ட சொன்னார்கள். நான் மசூதிக்கு சென்று வருகிறேன் என கூறினேன். உடனே ஒருவர் என் கன்னத்தில் அறைந்தார். 

மேலும் ‘பாரத் மாதாகீ ஜெய்’ என்றும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றும் கூறுமாறு வற்புறுத்தி அடித்தனர். நான் அவ்வாறு கூற மறுத்துவிட்டேன். உடனே பன்றி கறியை சாப்பிட வைப்போம் என மிரட்டினர். நான் அவர்களை தள்ளிவிட்டுவிட்டு ஓட முயற்சித்தேன். அப்போது ஒருவர் என் சட்டையை கிழித்தனர். நான் கதறி அழுதேன். உடனே அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்” எனத் தெரிவித்தார்.