சில தருணங்களில். விலங்குகளின் மேல் பரவக்கூடிய சிலவகை ஒட்டுண்ணிகள் அந்த விலங்கிற்கும், அந்த விலங்கினால் சில மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும். இவற்றை தடுக்கும் நோக்கத்தில், அறிவியலாளர்கள் பல ஆராய்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில்தான் உயிருள்ள தவளை ஒன்றின் உடலுக்குள் இருந்து, காளான் ஒன்று வெளியே வளர்ந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தீங்கிழைக்கும் காளானா அல்லது தவளையை மட்டும் பாதிக்கும் காளானா, இது எப்படி தவளையின் உடலோடு சேர்ந்து வளர்ந்தது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்து வருகிறார்கள் அவர்கள்!
பொதுவாக மழை பெய்து முடிந்ததும் ஆங்காங்கே, குறிப்பாக பூஞ்சை நிலப்பரப்பிலும் அழுகிய மரக்கிளைகளிலும் காளான் வளர்வதை நாம் கண்டிருப்போம். ஆனால் உயிருள்ள, ஓடி ஆடி சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய விலங்குகளின் மேல் காளான் வளர்வதை பார்த்து இருக்கிறீர்களா? அறிவியலாளர்கள் கண்டது அப்படியான ஒன்றுதான்.
சம்பவத்தின்படி இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அறிவியலாளர்கள் ஒரு உயிருள்ள தவளையின் மேல் வெள்ளை காளான் ஒன்று வளர்ந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது ஆச்சர்யதக்க செய்தி என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கர்நாடகாவின் கார்காலா மாலா குரேமுகா என்ற மலைத்தொடரின் அடிவாரத்தில் தேங்கிய மழைநீர் குளத்தில்தான் ‘ராவ்ஸ் கோல்டன் பேக்டு’ (Rao’s Golden-backed frog) என்ற வகையினை சார்ந்த ஒரு தவளையை அறிவியலாளர்கள் கண்டுள்ளனர். அதன் உடலின் வலப்பக்கத்தில் வெள்ளை நிறத்தில் காளான் ஒன்று வளர்ந்திருந்தது. அதைக்கண்டு ஆச்சர்யமடைந்த அறிவியலாளர்கள் அந்த காளானால் தவளை எந்தவகையில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள அதை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் அதை அவர்கள் புகைப்படம் எடுத்த நிலையில், அதை REPTILES & AMPHIBIANS இதழில் வெளியிட்டுள்ளனர்.
இதை கண்ட பூஞ்சை நிபுணர்கள், “உலகத்தில் தீங்கிழைக்கக்கூடிய 700க்கும் மேற்பட்ட பூஞ்சைகள் இருக்கின்றன. அதில் ஒருசில காளான்கள் மனிதர்களின் உயிரை எடுக்கக்கூடியவை. தவளையின் மேல் வளர்ந்திருக்கும் இவ்வகை காளான்கள் இறந்த மற்றும் அழுகிய மரங்களில் மட்டுமே வளரக்கூடியது. Bonnet Mushroom என்று அவை சொல்லப்படும்.
இது மனிதர்களுக்கு தீங்கிழைக்கக்கூடியதா அல்லது தவளைகளுக்கு மட்டுமே தீங்கிழைக்கக்கூடியதா அல்லது இவை தீங்கே இழைக்காதா என்பதையெல்லாம் அத்தவளையை நேரடியாக ஆராயாமல் கூற முடியாது. ஆகவே இப்போதைக்கு இதில் கூற எதுவும் இல்லை” என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.