மேன்ஹோல் எக்ஸ் தளம்
இந்தியா

மும்பை|'மேன்ஹோல்' விபத்து.. 45வயது பெண் உயிரிழப்பு.. பின்னணியில் திருட்டுச் சம்பவங்கள்.. பகீர் தகவல்

Prakash J

மேன்ஹோல் விபத்தில் பெண்மணி உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் குளம்போல தண்ணீர் தேங்கியது. கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், 45 வயதான விமல் அனில் கெய்க்வாட் தெருவில் தேங்கியிருந்த தண்ணீரில், அதாவது மேன்ஹோல் விபத்தில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்துள்ளார். இந்தச் சம்பவம் மும்பையில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், மேன்ஹோல் மூலம் சமீபகாலமாக அதிக மரணங்கள் நிகழ்வதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடப்பு ஆண்டு மட்டும் மாக்சிமம் சிட்டியில் மேன்ஹோல் விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம், சுனில் வகோட் என்ற தொழிலாளியும் அதற்கு முன்னதாக ஏப்ரல் மாதம், ரகு சோலங்கி, ஜாவேத் ஷேக் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பு, மார்ச் மாதம், மேன்ஹோல் விபத்தில் சுராஜ் கேவட், பிகாஸ் கெவட் மற்றும் ரம்லகான் கெவாட் ஆகிய தொழிலாளர்கள் மலாட் மேற்கு பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​​விழுந்து உயிரிழந்தனர்.

அதற்கு முன்பு, 2017இல் இரைப்பைக் குடலியல் நிபுணரான டாக்டர் தீபக் அம்ரபுர்கர் மரணமடைந்தார். அதற்கு அடுத்த ஆண்டு, 18 வயதான அர்ஜுன் மலாட் என்பவரும், தொடர்ந்து ஷீத்தல் பானுஷாலி என்ற 35 பெண்மணியும் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிக்க: என்னது தூங்குறதுக்கு லட்சம் லட்சமா பரிசா! ஸ்லீப் சாம்பியன் போட்டியில் 9 லட்சம் வென்ற பெங்களூரு பெண்!

மும்பையில் மேன்ஹோல் மூடி திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

இவர்களுடைய உயிரிழப்புக்கு மேன்ஹோல் மூடி திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதற்கேற்றபடி, கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் மேன்ஹோல் மூடி திருட்டு சம்பவங்களும் கடுமையாக அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு மட்டும், 791 மேன்ஹோல் மூடி திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு, இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை 836 ஆக இருந்ததாகவும், இது நான்கு ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முந்தைய மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடன் ஒப்பிடும்போது இது கடுமையான உயர்வாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி, 2021இல் 564, 2020இல் 458 மற்றும் 2019இல் 386 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் மேன்ஹோல் மூடிகள்!

மேன்ஹோல் மூடிகள் வார்ப்பிரும்புகளால் ஆனவை. மேலும் அவை நல்ல விலைக்குப் போகக்கூடியவை. குறிப்பாக, அவற்றுக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை விலை கொடுக்கப்படுகிறது. கள்ளச்சந்தைகளில் இதற்கு நல்ல மார்க்கெட் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாகவே, திருடர்கள் சாலைகளில் உள்ள மேன்ஹோல் மூடிகளைத் திருடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. டாக்டர் தீபக் அம்ராபுர்கரின் மரணத்தைத் தொடர்ந்து, மும்பை உயர்நீதிமன்றம், திருடர்களிடமிருந்து மேன்ஹோல் மூடிகளைப் பாதுகாக்க, அதன்மீது தடுப்பு கிரில்களை நிறுவுமாறு BMC (Bombay Municipal Corporation) பரிந்துரைத்தது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையில், நகரில் உள்ள 74,682 மேன்ஹோல்களில் 1,908 இடங்களில் மட்டுமே கிரில்ஸ் பொருத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. தாமதமான முன்னேற்றத்திற்காக நீதிமன்றம் பிஎம்சியை கண்டித்தது.

இதையும் படிக்க; டெஸ்ட் தரவரிசை| சரிவைச் சந்தித்த ரோகித், கோலி.. முன்னேறிய ரிஷப்.. முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்!

மேன்ஹோல்கள் (Manholes) என்பது என்ன?

மேன்ஹோல்கள் (Manholes) என்பது, சாக்கடை அமைப்பிற்கான மறுசீரமைப்பு முறையாகும். இது, கழிவுநீர் பாதையில் உள்ள அடைப்புகளை அகற்றுவதற்காக தொழிலாளர்கள் உபயோகப்படுத்தும் அணுகல் புள்ளியாகும். கழிவுநீர் பாதையில் சேதமடைந்த குழாயை தோண்டும் வேலையின்றி மாற்றுவதற்கு இவை உதவுகின்றன. பொதுவாக,மேன்ஹோல் என்பது ஆய்வுப் புள்ளியை அடையப் பயன்படும் வெவ்வேறு அளவுகள் மற்றும் ஆழங்களைக் கொண்ட செங்குத்து வட்ட அறையைக் கொண்டுள்ளது.

மேன்ஹோல் மூடிகள் வெவ்வேறு அளவு, பொருள் மற்றும் செவ்வக, வட்ட மற்றும் சதுர வடிவிலும் கிடைக்கின்றன. மேன்ஹோல் மூடி என்பது அவ்வப்போது திறந்து மூடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக மேன்ஹோல் மூடி என்பது கான்கிரீட், வார்ப்பிரும்பு என்பது கான்கிரீட், வார்ப்பிரும்பு மற்றும் இரண்டின் கலவையால் ஆனது. இந்தப் பொருட்களைப் பயன்படுத்தி மேன்ஹோல் மூடிகள் தயாரிக்கப்படுவதன் நோக்கம் இவை மலிவானது, அதிக ஆண்டுகள் நீடித்து உழைக்கக்கூடியது மற்றும் கனமானது.

இதையும் படிக்க: ”அஜய் ஜடேஜா எங்களுக்காக அழுதார்” - ஆப்கானிஸ்தான் வீரர் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!