மும்பை பைக் - கார் விபத்து | விபத்தை ஏற்படுத்தியவர், விபத்தில் உயிரிழந்தவர் முகநூல்
இந்தியா

மும்பை | அதிவேகமாக வந்த கார்... தம்பதிக்கு ஏற்பட்ட துயரம்! 100 மீ இழுத்துச் செல்லப்பட்ட பெண்!

மும்பை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியின் மீது வேகமாக வந்த BMW கார் மோதியதில், இருசக்கர வாகனத்தின் பின்புறம் இருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியை சேர்ந்தவர்கள் காவேரி நக்வா, பிரதிக் நக்வா தம்பதி. இவர்கள் நேற்றைய தினம் (07.07.2024) அதிகாலை 5.30 மணி அளவில் சசூன் துறைமுகப்பகுதியில் இருந்து மீன் வாங்கி கொண்டு இவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அப்போது அதிவேகமாக வந்த BMW கார் ஒன்று, இருசக்கர வாகனத்தில் வந்த இத்தம்பதியின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகனம்

இதில் அத்தம்பதி வந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகவே, கணவன் மனைவி இருவரும் காரின் பானட் மீது தூக்கி வீசப்பட்டனர். அப்போது கணவர் பிரதிக் நக்வா காரின் பானட்டிலிருந்து குதித்ததால், படுகாயம் அடைந்து உயிர் தப்பினார். ஆனால் மனைவி காவேரி நக்வா கடுமையாக போராடியும் பானட்டிலிருந்து தப்பிக்க இயலாததால், கிட்டதட்ட 100மீ வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், காரை விட்டு தப்பிச்சென்றுள்ளார். இதற்கிடையே படுகாயம் அடைந்த கணவன் மனைவி இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவே, அங்கு காவேரி மட்டும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து, இந்த ஹிட் அண்ட் ரன் விபத்தை ஏற்படுத்தியது யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை முடிவில் விபத்து ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ காரை கைப்பற்றிய காவல்துறையினர், அதன் உரிமையாளரும் பால்கரின் உள்ளூர் சிவசேனா (ஷிண்டே அணி) தலைவருமான ராஜேஷ் ஷாவை கைது செய்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தியவர், விபத்தில் உயிரிழந்தவர்

மேலும், இந்த விபத்தை ஏற்படுத்தியத காரில் ராஜேஷின் 24 வயதான மகன் மிகிர் ஷா இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதன்பேரில், தப்பியோடிய மிகிர் ஷா மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் இவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே ஓர்லி உயிரிழந்த பெண்ணின் கணவரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். பிறகு இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.

அதில், “மும்பையில் வாகன ஓட்டிகளின் டிரைவிங் ஸ்டைல் மற்றும் ஒழுக்கம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். எதிர்திசையில் வாகனங்கள் ஓட்டுவது, சிக்னல்களை பின்பற்றாதது, மூன்று பேர் செல்வது போன்றவை மும்பையில் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. தற்போது ஹிட் அண்ட் ரன் சம்பவங்களும் நிகழத் தொடங்கியுள்ளன.

விபத்தை ஏற்படுத்திய வாகனம்

விபத்துக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அரசியலைத் தாண்டி இந்த நிலைமைகள் மேம்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன் மதுபோதையில் கார் ஓட்டி கோர விபத்தை ஏற்படுத்திய சூழலில், அடுத்தடுத்த ஏற்படும் இதுபோன்ற விபத்துக்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளன.