இந்தியா

ஹஃபீஸ் சையதின் மகனும் தீவிரவாதிதான்: மத்திய அரசு அறிவிப்பு

ஹஃபீஸ் சையதின் மகனும் தீவிரவாதிதான்: மத்திய அரசு அறிவிப்பு

ஜா. ஜாக்சன் சிங்

மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவரும், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை தோற்றுவித்தவருமான ஹஃபீஸ் சையதை தொடர்ந்து, அவரது மகன் ஹஃபீஸ் தால்ஹா சையதையும் 'தீவிரவாதி' என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மும்பையில் பல்வேறு இடங்களில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் தலைவரான ஹஃபீஸ் சையது இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஹஃபீஸ் சையதுக்கு எதிரான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் வழங்கிய மத்திய அரசு, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதற்கு பாகிஸ்தான் சம்மதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ஹஃபீஸ் சையதை தீவிரவாதி என சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அறிவித்தது. மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நா.விலும் இந்தியா தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஹஃபீஸ் சையதின் மகன் ஹஃபீஸ் தால்ஹா சையதும் ஈடுபட்டு வருவதாக உளவு அமைப்புகள் ஆதாரங்களுடன் தெரிவித்து வந்தன.

குறிப்பாக, இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஆள் சேர்ப்பது, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, ஹஃபீஸ் தால்ஹா சையதையும் 'தீவிரவாதி' என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.