இந்தியா

மும்பை மழையில் மொத்த குடும்பத்தையும் இழந்த 8 வயது சிறுமி - சோகம் 

மும்பை மழையில் மொத்த குடும்பத்தையும் இழந்த 8 வயது சிறுமி - சோகம் 

webteam

மும்பை மழையில் 8 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தை இழந்து பரிதவித்து வருகிறது. 

மும்பையில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து மும்பை நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அத்துடன் ரயில் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து ஆகியவை ரத்தாகியுள்ளன. மேலும் மும்பை விமான நிலையத்தின் ஓடுதள பாதையும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை கிழக்கு மலாட் பகுதியில் குடிசைப்பகுதி ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியோரை மீட்பு பணியினர் மீட்டனர். இந்தச் சம்பவத்தில் 8 வயது மதிக்க தக்க குழந்தை பிரியா நானாவரே தனது மொத்த குடும்பத்தையும் இழந்து தவித்து வருகிறார். 

இந்தச் சம்பவத்தில் பிரியாவின் தந்தை, தாய் மற்றும் சகோதரிகள் ஆகிய அனைவரும் விபத்தில் பலியாயினர். இது தொடர்பாக பிரியாவின் உறவினர் ஒருவர், “பிரியா இந்த இடத்திற்கு சம்பவம் நடந்த நாளன்று இரவு தான் வந்தார். இதனால் இவர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இவருடைய தாத்தா,பாட்டி இவரது குடும்பத்தினரின் இறுதிச் சடங்கை மும்பையில் செய்யவிருக்கின்றனர்” எனத் தெரிவித்தார். 

தனது சிறியவயதில் மொத்த குடும்பத்தையும் இழந்து தவிக்கும் அந்தச் சிறுமியின் நிலை அனைவரையும் சற்று கண்கலங்க வைத்துள்ளது.