பாபா சித்திக், லாரன்ஸ் பிஷ்னோய், சல்மான் கான் எக்ஸ் தளம்
இந்தியா

பாபாசித்திக் படுகொலை| சல்மான்கானுக்கு மிரட்டல்.. மிகப்பெரிய நெட்வொர்க்.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?

Prakash J

லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலில் 700 பேர்!

மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பாபா சித்திக், கடந்த அக்டோபர் 12ஆம் தேதி, மும்பையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைக்கு சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இதுதொடர்பாக ஹரியானாவை சேரந்த குர்மயில் பல்ஜித் சிங் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் கஷ்யப் ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது. இந்த நிலையில், 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோயைப் பற்றிப் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்த வகையில், பிஷ்னோய் கும்பலில் சுமார் 700 பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கும்பல், உள்ளூர்க் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கிறது. அவர்கள் பெரும்பாலும் ஏழைச் சிறுவர்களாக உள்ளனர். பயிற்சி பெற்ற வீரர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. பின்னர், அந்த வேலைக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாதாம். பெரும்பாலும் பிஷ்னோய் அனைத்துச் சதித் திட்டங்களையும் சிறைக்குள்ளிருந்தே தீட்டுவதாகவும் அதற்கான வசதிகள் அவருக்கு கிடைக்கப் பெறுவதாகவும் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அவருடைய செல்வாக்கும் நெட்வொர்க்கும் மிகப் பெரியது எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா - ஒரே கட்டம், ஜார்க்கண்ட் - இரு கட்டம் | சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

லாரன்ஸ் பிஷ்னோய் குறிவைக்கப்படும் ஆட்கள்

லாரன்ஸ் பிஷ்னோய் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தனது கூட்டாளிகளுடன் தொடர்புகொள்ள சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறார். பிஷ்னோய் கும்பலின் கூடாரங்கள் பல நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக வடஅமெரிக்காவில் பரவியதால், லாரன்ஸ் பிஷ்னோய் அடிக்கடி தனது சகோதரர் அன்மோல் மற்றும் கோல்டி ப்ரார் மற்றும் ரோஹித் கோதாரா ஆகியோருடன் தொடர்பு கொள்கிறார். இந்த கும்பல் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் வடஅமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி பிரிவினைவாத குழுக்களுடன் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும், அவர் சிறைக்குள் இருந்தாலும் அவரது குழுவினர் வேலையைக் கச்சிதமாக முடிக்கின்றனர். மிரட்டி பணம் பறித்தல், கொலை, ஆயுதக் கடத்தல் ஆகியவற்றிலேயே பிஷ்னோய் கும்பல் ஈடுபடுகிறது. இந்தக் கும்பல், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பிரபலமான பஞ்சாபி பாடகர்கள், மதுபான மாஃபியாக்கள் மற்றும் பிற முக்கிய தொழிலதிபர்களைக் குறிவைக்கிறது.

யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?

பஞ்சாபின் ஃபாசில்காவில் உள்ள தத்ரன்வாலி கிராமத்தில் பிறந்த லாரன்ஸ் பிஷ்னோயின் தந்தை, ஹரியானா காவல்துறை கான்ஸ்டபிளாக இருந்தவர். சிறுவயதில், பிஷ்னோய் அழகாக இருந்ததால் அவரை எல்லோரும் ‘லாரன்ஸ்’ என அழைத்துள்ளனர். அதுவே காலப்போக்கில் அவருடைய அடையாளமாகவும் மாறிப்போனதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ’லாரன்ஸ்’ எனப் பெயர் இருப்பது இன்னும் வியப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. கல்லூரி மாணவர் பருவத்தின்போதே அவர்மீது முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. லாரன்ஸ் மீது 50 கிரிமினல் வழக்குகள் உள்ளன. தற்போது 22 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்மீதான 7 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால்தான் பல்வேறு நீதிமன்றங்களில், அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி வருகிறார்.

இதையும் படிக்க: உ.பி மகா கும்பமேளா 2025|இந்துக்கள் அல்லாதோர் உணவகம் அமைக்க ஏபிஏபி-ன் கிளை அமைப்பு எதிர்ப்பு!

நடிகர் சல்மான் கானை, லாரன்ஸ் குறிவைப்பது ஏன்?

2022-ஆம் ஆண்டில், கட்ச் பகுதியில் பாகிஸ்தான் கப்பலில் இருந்து பெருமளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கிலும், பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் லாரன்ஸுக்கு தொடர்பிருப்பதாக அவர்மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. இப்படி, பல வழக்குகள் அவர்மீது பதியப்பட்ட நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்யும் முயற்சிக்காக அவர் கவனம் ஈர்க்கப்பட்டார். பிஷ்னோய் சமூகத்தில் கரும்புலிகள் (black bucks) புனிதமான விலங்காகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், 1998 ஆம் ஆண்டு ’ஹம் சாத் சாத் ஹை’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் சல்மான் கான், ராஜஸ்தானில் இரண்டு மான்களை வேட்டையாடி கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக, சல்மானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதுகுறித்து பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா, எக்ஸ் தளத்தில் இரண்டு இடுகைகளைப் பகிர்ந்துள்ளார். அதில், ”இந்தச் சம்பவம் நடைபெற்றபோது லாரன்ஸுக்கு வெறும் 5 வயதுதான் ஆகியுள்ளது. அதுமுதல் 25 ஆண்டுகளாக மனதில் அந்த வெறுப்பை விதைத்துள்ளார். இப்போது, 30 வயதில் அவரைக் கொன்று பழிவாங்குவதே குறிக்கோள் என லாரன்ஸ் கூறுகிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.

அவருடைய மற்றொரு பதிவில், ”குண்டர் ஆன ஒரு வழக்கறிஞர், ஒரு சூப்பர்ஸ்டாரைக் கொன்று மானின் மரணத்திற்குப் பழிவாங்க விரும்புகிறார். மேலும், அவர் 700 பேர் கொண்ட கும்பலுக்கு உத்தரவிடுகிறார். அவர் முதலில் நட்சத்திரத்தின் நெருங்கிய நண்பரான ஒரு பெரிய அரசியல்வாதியைக் கொல்ல முகநூல் மூலம் ஆட்சேர்ப்பு செய்தார். சிறையில் அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பதாலும், வெளிநாட்டில் இருந்து அவரது செய்தித் தொடர்பாளர் பேசுவதாலும் அவரை காவல் துறையால் பிடிக்க முடியவில்லை. இது, எப்போதும் அபத்தமான கதை” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: துர்கா பூஜை |”ஆதாரமற்றவை” இந்துக்களின் பாதுகாப்பு குறித்த கவலை.. இந்தியாவுக்கு வங்கதேச அரசு பதில்

சல்மான் கானைக் கொல்ல வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் இறக்குமதி

இதுதொடர்பாக லாரன்ஸ், கடந்த 2023ஆம் ஆண்டு திகார் சிறையில் இருந்தபோது, ’’சல்மான் கானைக் கொல்வதே தனது வாழ்க்கையின் ஒரே நோக்கம்’’ என்று பேட்டியொன்றில் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படிதான், அவருடைய கும்பல் நடிகர் சல்மான் கானுக்குக் குறிவைத்தது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தில் பல நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அப்போதைய விசாரணையின்போது சல்மான் கானை முடிக்க, ரூ.25 லட்சம் கைமாறியதாகவும், பாகிஸ்தான் மற்றும் துருக்கியில் இருந்து ஆயுதங்களைப் பெற்றதாகவும் தகவல் வெளிவந்தது. எனினும், சல்மான் கான் மான்களை வேட்டையாடியதற்கு பிஷ்னோய் இன மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை விடுத்துள்ளார். சல்மான் கான் மன்னிப்பு கேட்காத காரணத்தால்தான் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துவருகிறார்.

இதனால்தான் அவரது நெருங்கிய நண்பரும் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சல்மான் கான் இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் ஆலோசனை வழங்கி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ''சல்மான் கான் வேட்டையாடிய அபூர்வ வகை மான்கள் பிஷ்னோய் இனமக்களுக்கு மிகவும் முக்கியமானது. அதனை அந்த மக்கள் தெய்வமாக வணங்குகின்றனர். எனவே, அவர்களது மத உணர்வுகளைப் புண்படுத்தியதால் அதற்காக சல்மான் கான் மன்னிப்பு கேட்கவேண்டும். மக்கள் தவறு செய்யலாம். பெரிய நடிகரான உங்களை நாடு முழுவதும் ஏராளமானோர் விரும்பலாம். எனவே பிஷ்னோய் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சல்மான் கான் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும். மன்னிப்பு கேட்பதால் மதிப்பு குறைந்து விடப்போவதில்லை'' என அதில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக சல்மான் கான் வீட்டுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, லாரன்ஸ் பிஷ்னாயை, அவர் கைதியாக இருக்கும் அகமதாபாத் சபர்மதி சிறையிலேயே விசாரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் தீவிரவாத தடுப்புப் படையின் விசாரணையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னாயின் மீது பல குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது. தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வளையத்திலும் அவர் இருப்பதால் வேறு வழக்குகளுக்கான விசாரணைக்கு அவரை சிறை வளாகத்திலிருந்து வெளியே கொண்டு செல்லக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.