இந்தியா

”அவன் ரூல்ஸ மீறியே பழகிட்டான்; நான் ஃபைன்..” ட்விட்டரில் குமுறிய மும்பைவாசி; என்ன நடந்தது?

”அவன் ரூல்ஸ மீறியே பழகிட்டான்; நான் ஃபைன்..” ட்விட்டரில் குமுறிய மும்பைவாசி; என்ன நடந்தது?

JananiGovindhan

ரக ரகமான போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து அறிந்திருப்போம். அவ்வாறு விதிகளை மீறுவோர்களை டிராஃபிக் போலீசாரால் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அபராதம் விதிப்பதும் நூதன தண்டனை கொடுப்பதுமாக இருந்து வருகிறது.

இருப்பினும் அப்படியான செயல்களின் போது சில குளறுபடிகளாலோ அல்லது வாகன ஓட்டிகளின் விதிமீறலாலோ விதியை மீறியவர்களுக்கு பதிலாக வேறொருவருக்கு அபராதம் விதிக்கப்படுவதற்கான செலான் அனுப்பப்படும். அப்படியான சம்பவம்தான் மும்பையைச் சேர்ந்த பட்டைய கணக்காளருக்கு நடந்திருக்கிறது.

அதன்படி, டூ வீலர் வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய வண்டியின் நம்பர் ப்ளேட்டில் உள்ள EJ என்ற எழுத்து FJ ஆக தெரிந்ததால் டூ வீலர் உரிமையாளருக்கு பதிலாக கார் உரிமையாளருக்கு மாதந்தோறும் தவறாமல் மும்பை டிராஃபிக் போலீசிடம் இருந்து அபராதத்திற்கான செலான் அனுப்பப்பட்டு வருகிறது.

இதனால் நொந்துப்போன அந்த கார் உரிமையாளரான சுசித் ஷா ட்விட்டரில் வேதனை பொங்க பதிவிட்டுள்ளார். அதில் விதியை மீறி சிதைந்த நம்பர் ப்ளேட்டை மாட்டியிருந்த அந்த டூ வீலரின் போட்டோவை பகிர்ந்து, “இந்த நபர்தான் தொடர்ந்து டிராஃபிக் விதிடை மீறி வருகிறார். அவருடைய டூ வீலர் நம்பர் ப்ளேட்டில் உள்ள MH02EJ0759 என்பதற்கு பதில் MH02FJ0759 என மாற்றியிருக்கிறார். FJ0759 வரிசையில் உள்ளவை என்னுடைய கார் நம்பர்.

இதனால் டிராஃபிக் விதியை மீறியதாகக் குறிப்பிட்டு அந்த நபருக்கு பதில் எனக்குதான் மாதாமாதம் தவறாது மும்பை போக்குவரத்து போலீசிடமிருந்து அபராத செலான் வந்துக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக புகார் எழுப்பி நான் நொந்துப்போய்விட்டேன். தயவு செய்து உதவுங்கள்” என மும்பை டிராஃபிக் போலீசையும் டேக் செய்திருக்கிறார்.

சுசித்ஷாவின் இந்த ட்வீட் வைரலாகவே மும்பை டிராஃபிக் போலீஸ் சார்பாக, “உங்கள் குறைகளை மும்பை டிராஃபிக் ஆப்பில் பதிவிடுங்கள்” என பதிவிடப்பட்டிருக்கிறது. அதற்கு சுசித்ஷா, “ஏற்கெனவே 3 முறைக்கு மேல் புகார் கொடுத்தாகிவிட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

இதனிடையே, எப்படி டிராஃபிக் விதியை மீறியவரை கண்டுபிடித்தீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப, அதற்கு சுசித்ஷா “ஒவ்வொருமுறை செலான் வரும் போதும் ஃபோட்டோவும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதை வைத்து Mparivaahan-ல் செக் செய்தேன். அப்போதுதான் அந்த டூ வீலரை கண்டுபிடித்தேன். அதனை வைத்து MH 02 EJ வரிசையில் உள்ள வாகனங்களை தேடியபோதுதான் இந்த விதி மீறியவரை கண்டுபிடித்தேன்.” என த் தெரிவித்துள்ளார்.