இந்தியா

“வீட்டிற்கு அனுப்புங்கள்” : மும்பையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம்

“வீட்டிற்கு அனுப்புங்கள்” : மும்பையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம்

webteam

மும்பையில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க ஏப்ரல் 14 (இன்று) தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் வெளிமாநிலங்களில் பணிபுரிந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனர். இருப்பினும் 21 நாட்கள் முடிந்தவுடன் ஊருக்கு சென்றுவிடலாம் என இன்னல்களுக்கு இடையே இருந்து வந்தனர்.

இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சொந்த ஊருக்கு திரும்ப முடியாது என விரக்தி அடையச் செய்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில் பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டமாக கூடினால் கொரோனா பரவும் என அச்சம் நிலவி வரும் சூழலில், மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஏராளமானோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா இருப்பது குறிப்பிடத்தக்கது.